×

கேரள காங்கிரஸ் எம்பி ஷாநவாஸ் மரணம்

சென்னை: கேரள காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்பியுமான ஷாநவாஸ் உடல்நலக்குறைவால் இறந்தார். கேரளாவின் வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்பி ஷாநவாஸ் (67). கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கல்லீரல் செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டு, அதற்காக கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நவம்பர் 1ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நவம்பர் 2ம் தேதி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பின்னரும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால் தொடர்ந்து அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி, நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் நேற்று பிற்பகலில் விமானம் மூலம் கொச்சி கொண்டு செல்லப்பட்டது. ஷாநவாஸ், மாணவர் சங்க பிரதிநிதியாக தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியவர். அதைத்தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். சில மாதங்களுக்கு முன், கேரள காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட 3 பேரில் ஷாநவாசும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மறைவுக்கு கேரள காங்கிரஸ் நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shahnawaz ,death ,Kerala Congress , Kerala, Congress MP, Death, Shahnawaz
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...