×

திருத்துறைப்பூண்டியில் புயல் பாதிப்பு பார்வையிட வராத அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில்  கஜா புயலால் பாதித்த பகுதியை பார்வையிட வராத  அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம். திருத்துறைப்பூண்டி நகரம் மற்றும் ஒன்றிய பகுதி கஜா புயலால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. 6 நாட்களாகியும் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் இருந்து வருகின்றனர். முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு அரிசி மட்டும் வழங்கி குடிநீர் மற்றும் மளிகை பொருட்கள் வழங்காததை கண்டித்தும் அதிகாரிகள் வந்து பார்வையிடாததை கண்டித்தும் கடந்த 3 தினங்களாக ஒன்றிய நகர பகுதிகளில் பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் செய்து வருகின்றனர். பல இடங்களில் முறிந்து கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சாலை ஓரங்களில் கிடக்கிறது. நேற்று வரை 6 நாட்களாக ஒன்றிய நகர பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் வயதானவர்கள், குழந்தைகள் பெருமளவில்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மேட்டுப் பாளையம், மேலமருதூர் தெற்குபிடாகை, விளக்குடி, பிச்சன்கோட்டகம் தென்பாதி, எல்லைநாகலடி போன்ற பல இடங்களில் அரசு அதிகாரிகள் வந்து பார்வையிடாததை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. நகர பகுதிகளில் நேற்று பாதி கடைகள் திறக்கப்பட்டிருந்தது. கிராம பகுதியில் ஒருசில கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள்  அச்சமடைந்துள்ளனர். நகர பகுதியில் மின்சாரம் வழங்குவதற்கு துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராம பகுதியில் மின்சாரம் வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சேகரை, மிளகுகுளம், பொதக்குடி, பூதமங்கலம உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஜாபுயல் தாக்கத்தால் 6 நாட்கள் குடிநீர், மின்சாரம் இல்லாததால் மக்கள் பரிதவிக்கின்றனர். இதையடுத்து நேற்று காலை கொராடச்சேரி கூத்தநல்லூர் சாலை சேகரையில் 300 பேர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை, அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மின்சாரம், குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

மன்னார்குடி-திருவாரூர் சாலை லட்சுமாங்குடி பாலத்தில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும். மின்சாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். புயலால் இறந்த மாட்டிற்கு ரூ.35ஆயிரம், ஆட்டிற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் உட்பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் உடனடியாக மின்சார வினியோகம் வழங்கக் கோரி வாகைமரம், களப்பக்காடு, எம்.ஜி.ஆர் சிலை, அக்னிபஜார் ஆகிய 4 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,storm ,Tiruthuraipothy , People storm ,road to protest ,officials who did not ,storm in the Tiruthuraipothy
× RELATED கந்தர்வகோட்டை- தஞ்சை சாலையில் உள்ள...