×

சென்னைக்குத் தேங்காய் வரத்துக் குறைந்துள்ளதால் கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை கிலோவுக்கு 5 ரூபாய் உயர்வு

சென்னை: புயல் பாதித்த பகுதிகளில் இருந்து சென்னைக்குத் தேங்காய் வரத்துக் குறைந்துள்ளதால் கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஒரு நாளைக்கு 25 லாரிகளில் தேங்காய் கொண்டுவரப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் புயல் பாதித்த பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவையாறு ஆகிய பகுதிகளில் இலட்சத்துக்கு மேற்பட்ட தென்னைகள் சாய்ந்ததால் அங்கிருந்து சென்னை சந்தைக்குத் தேங்காய் வரத்துக் குறைந்துள்ளது. புயலுக்கு முன் ஒரு நாளைக்கு 25 லாரிகளில் தேங்காய் வந்திறங்கிய நிலையில், புயலுக்குப் பின் ஒரு நாளைக்கு 15 லாரிகளே தேங்காய் வருகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய் வருவதாகவும், இப்போது பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்து தேங்காய் வரும் காலம் என்பதால் வரத்து குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டுவதற்காகத் தேங்காய் வாங்குவார்கள் என்பதால் வழக்கத்தைவிடத் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் புயலுக்கு முன் ஒரு கிலோ தேங்காய் 27 ரூபாய்க்கு விற்ற நிலையில், இப்போது ஒருகிலோ தேங்காய் 32 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும் என்றும், தேவையைச் சமாளிக்க மற்ற பகுதிகளில் இருந்து தேங்காய் கொண்டுவருவதற்குப் பேச்சு நடத்தி வருவதாகவும் வணிகர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Koyambedu , coconut price,Koyambedu,market,5 rupees
× RELATED சென்னை காவல் துறையில் 21...