×

மகா தீபம் தரிசனம் காண மலைமீது செல்ல 2,500 பக்தர்கள் மட்டும் அனுமதி : கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழைவையொட்டி மகா தீபம் தரிசனத்திற்கு அண்ணாமலையார் மலை மீது 2,500 பக்தர்கள் மட்டும் நிபந்தனைகளுடன் ஏற அனுமதிக்கப்பட உள்ளது. மலை மீது ஏறுவதற்கான அனுமதி சீட்டு வரும் 23ம் தேதி காலை வழங்கப்பட உள்ளது என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான மாகதீபம் வரும் 23ம் தேதி ஏற்றப்படுகிறது. அதையொட்டி மலைமீது சென்று மகாதீபம் தரிசனம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அண்ணாமலையார் மலை மீது 2,500 பக்தர்கள் மட்டும் நிபந்தனைகளுடன் ஏற உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, மலை ஏறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிச்சீட்டு வழங்கப்படும். மலை ஏற விருப்பம் உள்ள பக்தர்கள் அனுமதி சீட்டு பெற கிரிவலப்பாதையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் வரும் 23ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி சீட்டு பெற வரும் பக்தர்கள் உரிய அடையாள சான்று  ஆதார்கார்டு நகல் எடுத்து வர வேண்டும். அனுமதி சீட்டு பெற்றவர்கள் மலை ஏறுவதற்கென அறிவிக்கப்பட்ட பே கோபுரம் எதிர் புறத்தில் அனுமதி சீட்டினை காண்பித்து மலை மீது ஏற வேண்டும். மற்ற வழிகளில் மலை ஏற அனுமதி இல்லை.

மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். காலி பாட்டிலை மலை மீது வீசாமல், திரும்பி வரும் போது எடுத்து மலை அடிவாரத்தில் உள்ள குப்பை தொட்டியில் போட வேண்டும். கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல கூடாது. பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த பகுதியிலும் ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.
எனவே, மலை ஏறவரும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட வழியில் மட்டுமே மலை ஏறவும், இறங்கவும் வேண்டும். இத்தகைய நிபந்தனைகளுக்கு உட்படும் பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏற அனுமதி சீட்டு வழங்கப்படும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims ,mountain ,lighthouse , deepam, Darshan, Devotees
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்!