×

அரசு உத்தரவை கண்டுகொள்ளாத அதிகாரிகள் டாஸ்மாக் கடை, பார்களில் டெங்கு தடுப்பு பணியில்லை: ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் அதிகாரிகள் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுவதில்லை, என ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்து மக்களுக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆய்வு மற்றும் கொசு ஒழிப்பு பணி மேற்ெகாள்ளப்படுகிறது. குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகத்தை சுகாதாரமற்ற வகையிலும், கொசு உற்பத்தியாகும் நிலையிலும் வைத்துள்ளவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், டாஸ்மாக் பார் மற்றும் கடைகளை ஆய்வு செய்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கடந்த மாதம் முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில், தமிழகத்தில் உள்ள 5 முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அவர்களின் கீழ் உள்ள மாவட்ட மேலாளர்களும், பறக்கும் படை அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.  தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு வரை நேரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள் தற்போது, எந்த டாஸ்மாக் கடைகளுக்கும் ஆய்வுக்கு செல்வதில்லை. பல மாவட்டங்களில் இதே நிலை நீடிப்பதால், பார்களில் உள்ள குப்பை குவியலில் கொசு உற்பத்தி அதிகரித்து வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் டெங்கு பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் ஆய்வு செய்ய வேண்டும். குப்பை கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும். டெங்கு பரவும் வகையில் பார் மற்றும் கடைகளை வைத்திருந்தால் உரிய அபராதம் விதிக்க வேண்டும் என கடந்த மாதம் அதிகாரிகளுக்கு நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அடுத்து சில நாட்கள் மட்டுமே அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றினர். ஆனால், தீபாவளிக்கு பிறகு அதிகாரிகள் டாஸ்மாக் கடை மற்றும் பார்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வதில்லை. நிர்வாகமும் வருவாயை மட்டுமே குறியாக வைத்து செயல்பட்டு வருகிறது.

ஆய்வு பணியை சரிவர செய்யாத எத்தனை பேர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் டெங்குவை தடுக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து டாஸ்மாக் நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bar ,Tashkm Shop , Government, Task Shop, Dengue, Staff
× RELATED பார் ஊழியரை மிரட்டி வழிப்பறி