×

டிடிஆர் துரத்தியதால் ரயிலில் சிக்கி வாலிபர் படுகாயம்

சென்னை:  சேலையூர் ராஜமாணிக்கம் தெருவை சேர்ந்த தினேஷ் (20) நேற்று முன்தினம் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயிலில் வந்துள்ளார். பல்லாவரம் ரயில் நிலையத்தில், டிடிஆர் ஜெய்கணேஷ் என்பவர் ரயிலில் ஏறி தினேஷிடம் பயணச்சீட்டை பெற்று ஆய்வு செய்தபோது, அவர் 2ம் வகுப்பு பயணச்சீட்டை வைத்துக்கொண்டு முதல் வகுப்பில் பயணித்தது தெரியவந்தது.
இதனால், அவரை ரயிலில் இருந்து இறக்கி தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். தெரியாமல் முதல் வகுப்பில் ஏறிவிட்டேன் என தினேஷ் கூறியும், அவர் ஏற்க மறுத்துள்ளார். இதனால், பயந்துபோன தினேஷ் தன்மீது வழக்கு பதிவு செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் தப்பி ஓடினார். டிடிஆர் அவரை விடாமல் துரத்தியதால் தண்டவாளத்தில் இறங்கி ஓட முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த மின்சார ரயிலில் அடிபட்டு படுகாயமடைந்தார். அவருக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

* மாநகர பஸ் கண்டக்டரை தாக்கிய புளியந்தோப்பை சேர்ந்த அஜித் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* அயனாவரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்  (45). நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
* செங்குன்றம் ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர்  சாகித் சையத் (40), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரியங்கா (23).  இவர்களது மகன் ஆமேஷ் (2). குழந்தையை பார்த்துக் கொள்வதில் தம்பதிக்குள்  பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார்.
* பம்மல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்  ராஜா (21), டிப்ளமோ படித்துவிட்டு வேலை தேடி வந்தார். இவரது தங்கைக்கு  கடந்த 14ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், வசதியான மாப்பிள்ளை  கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில், மனமுடைந்த ராஜா, நேற்று வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* பல்லாவரம் ரயில் நிலையம் அருகில் கிடந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை, போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
* அனகாபுத்தூர் அயோத்தியம்மன் கோயில்  தெருவை சேர்ந்த ஜனார்த்தனன் (40), என்பவரை தாக்கி, அவரது கார் கண்ணாடியை  உடைத்த அனகாபுத்தூர் கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (25),  கோபால் (28), பாபு (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய பாலாஜி  (28) என்பவரை தேடி வருகின்றனர்.
* அடையாறு அருணாசலபுரம் ராமசாமி கார்டனை சேர்ந்த விக்னேஸ்வரன் (30) நேற்று தனது வீட்டின் அருகே மயங்கி விழுந்து இறந்தார்.
* மாதவரத்தில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட வியாசர்பாடி சர்மா நகரை அஜித்குமார் (18) மற்றும் 17 வயது சிறுவன், புளியந்தோப்பை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

15 கிலோ கஞ்சா பறிமுதல்
செங்கல்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா நோக்கி வந்த சிர்கார் எக்ஸ்பிரஸ் ரயில்,  எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்றபோது போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றை சோதனை செய்தபோது, 8 பெட்டலங்களில் 3 லட்சம் மதிப்புள்ள 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

தவறவிட்ட 35 சவரன் போலீசில் ஒப்படைப்பு
எழும்பூர் ரயில் நிலைய வடக்கு நுழைவாயில் அருகே கேட்பாரற்று கிடந்த ஒரு பையை, ஆட்டோ டிரைவர்களான வினோத் (32), ஆனந்தன், (38), தணிகைவேல் (42), ஆகியோர் மீட்டு எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பையை சோதனை செய்தபோது, 35 சவரன் நகைகள் இருந்தது.  விசாரணையில் ஐதராபாத்தை சேர்ந்த மதி (38), என்பவர் தவறவிட்டது தெரிந்தது. அந்த பையை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TTR, train and youth wound
× RELATED ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி...