×

பிரதமர் ஆபீஸ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி பள்ளி அதிபரிடம் ரூ.27.93 லட்சம் சுருட்டல்: சென்னை ஐடி ஊழியர் கைது

ஈரோடு: பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி என கூறி தனியார் பள்ளி தலைவரிடம் ரூ.27.93 லட்சம் மோசடி செய்த சென்னை ஐடி ஊழியரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் இளங்கோ (67). இவர் ஈங்கூரில் உள்ள தனியார் பள்ளி தலைவராக உள்ளார். இவரது மனைவி உமையவள்ளி. அதே பள்ளியின் முதல்வராக உள்ளார். இவர்களுக்கு அஸ்வின் என்ற மகன் உள்ளார். இளங்கோ கடந்த 16ம் தேதி ஈரோடு எஸ்பி ஜவகரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:

எனது தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்தபோது அதிக நஷ்டம் ஏற்பட்டதால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்க வெற்று பத்திரம், வெற்று காசோலைகள் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சில வழக்குகள் எங்களுக்கு சாதகமாகவும், சில வழக்குகள் எதிர்தரப்பினர்களுக்கு சாதகமாகவும் வழங்கப்பட்டுள்ளது. வழக்குகளைநடத்த ஒருவரை நியமிக்க முடிவு செய்தோம். 2023 ஜனவரி மாதம் சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது, வில்லிவாக்கம் ராஜாஜி 5வது வீதியை சேர்ந்த ஆனந்த் வைஷ்ணவ் (37) என்பவர் அறிமுகமானார். அவர், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்றும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அரசு துறையில் இணை செயலாளராக பணியாற்றியதாகவும், தற்போது ஐபி-ல் (இன்டிலிஜன்ஸ் பியூரோ) பிரதமர் அலுவலகத்தில் (பிஎம்ஓ) பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

இதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கை சிறப்பாக நடத்தி, சாதகமாக உத்தரவு பெற முடியும் என்றும், உச்சநீதிமன்றத்தில் ‘சூ மோட்டோ’ வழக்காக எடுத்து அனைத்து சொத்துக்களையும் பெற்று தருவதாகவும், ஒரு பெரிய தொகையை இழப்பீடாக பெற்று தருவதாகவும் ஆனந்த் வைஷ்ணவ் ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி 2023 மே 22ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி வரை வங்கி கணக்கு மற்றும் ஜிபே மூலம் ரூ.27 லட்சத்து 93 ஆயிரத்து 344 அனுப்பினோம். எனது மகன் அஸ்வினுக்கு இந்தியன் கிரிக்கெட் வாரியத்தில் மாணவர்கள் பயிற்சி பிரிவுக்கு இயக்குநர் பணி வாங்கி தருவதாகவும், மாதம் ரூ.4.15 லட்சம் சம்பளம் தருவார்கள் என்றும், அந்த பயிற்சி துபாயில் நடக்கும் என்றும் கூறி மகன் மற்றும் மருமகளின் அசல் பாஸ்போர்ட் பெற்று சென்றார். இதுதவிர ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள நவரத்தின மோதிரம், 5 செல்போன்களையும் ஆனந்த் வைஷ்ணவ் எடுத்து சென்றார்.

இறுதியாக ஒரு பத்திரத்தில், எங்களின் இயற்கையான மரணத்திற்கு பிறகுதான் சொத்துக்கள் மகன் அஸ்வினுக்கு போகும் என்றும், எங்களது மரணம் துர்மரணமாக இருப்பின் அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் ஆனந்த் வைஷ்ணவ் மேற்பார்வையில் மட்டும் இருக்கும் என்று எழுதி கொடுக்க சொல்லி மிரட்டி வாங்கினார். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராததால் அதுபற்றி கேட்டபோது, உங்களை கொலை செய்து, பழியை உங்களது மகன் மீது போட்டு விடுவேன் என மிரட்டல் விடுத்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இதையடுத்து எஸ்பி ஜவகர் உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இளங்கோவிடம் மோசடி செய்த ஆனந்த் வைஷ்ணவ், எம்எஸ்சி முதுகலை பட்டம் படித்து விட்டு ஐடி கம்பெனிகளில் பணியாற்றியவர் என்பதும், எவ்வித அரசு பணிகளில் பணியாற்றாதவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ஆனந்த் வைஷ்ணவ் மீது மீது மோசடி, கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, நேற்று கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 அசல் பாஸ்போர்ட், ஒரு மோதிரம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அவரது வங்கி கணக்கையும் முடக்கினர்.

The post பிரதமர் ஆபீஸ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி பள்ளி அதிபரிடம் ரூ.27.93 லட்சம் சுருட்டல்: சென்னை ஐடி ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Prime Minister's Office ,IAS ,Chennai ,IT ,Erode ,district ,Ilango ,Perundurai ,Dinakaran ,
× RELATED அக்னிபாத் திட்டத்தில் மாற்றம்...