×

கஜா 175 கி.மீ. வேகத்தில் வீசியது: நாகையை அச்சுறுத்தும் இன்னொரு புயல்: தனியார் வானிலை நிபுணர் தகவல்

சென்னை: தமிழகத்தை நேற்று முன்தினம் தாக்கிய கஜா புயல் 175 கி.மீ. வேகத்தில் வீசியதாக தனியார் வானிலை நிபுணர் அறிவித்துள்ளார். அதேபோன்று அடுத்தடுத்து இரண்டு புயல் தமிழகத்துக்கு வருவது குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் நாகை அருகே கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்படுத்தியுள்ளது. இந்த கஜா புயல் கரையை கடக்கும்போது அதிகப்பட்சமாக சில இடங்களில் 175 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதாக தனியார் வானிலை நிபுணர் செல்வக்குமார் கூறியுள்ளார். மேலும், அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி இரண்டு புயல்கள் வருவது குறித்தும் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, தனியார் வானிலை நிபுணர் செல்வக்குமார் இன்று கூறியதாவது: கரை கடந்து செயல் இழந்த கஜா தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கேரளா கரையோரம் நிலை கொண்டுள்ளது. இது லட்சத்தீவு சென்று அங்கிருந்து மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மீண்டும் புயலாக உருவெடுத்து சோமாலியா, ஏடன் வளைகுடா நோக்கி பயணிக்கும். இதன் காரணமாக கிழக்கில் இருந்து வங்கக்கடல் காற்றை அரபிக்கடல் நோக்கி மேற்கு தொடர்ச்சி மலை கேரளா வழியாக ஈர்க்கும். இதனால் கடலூர் - கன்னியாகுமரிக்கு இடைப்பட்ட மாவட்டங்கள் வழியாக மேக கூட்டங்கள் செல்லும் என்பதால் ஆங்காங்கே லேசான மழை இன்று பெய்யும். ஒரு சில இடங்களில் மிதமான, சற்று கனமழை பெய்யக்கூடும். நாளை 18ம் தேதி அது புயலாக மாறும். ஆனால் அது நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. அது ஆப்பிரிக்கநாட்டை நோக்கி பயணிக்கிறது. அடுத்ததாக இன்று அந்தமான் தெற்கு கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி விட்டது. இன்று உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறி மேற்கு நோக்கி நகரும். வரும் 20, 21ம் தேதி இலங்கையை ஒட்டி வந்து 21ம் தேதி வேதாரண்யம் ஓரமாக அது வரும். இது சாதாரண புயல்தான். இப்போது அடித்த புயலில் 4ல் ஒரு பங்கு குறைவான சக்தி கொண்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் ஒட்டி வந்து வடதமிழகம் முழுவதும் மழையை கொடுக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி இந்த மாவட்டங்களுக்கு மழை கொடுக்கும். பிறகு, அது நாகப்பட்டினம் - கடலூருக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும். இந்த புயல் நல்ல மழையைதான் கொடுக்கும். பெரிய அளவில் காற்று இருக்காது.
நேற்று அடித்த கஜா புயல் ஒரு சில மையங்களில் 175 கி.மீ. வேகத்தில் காற்று பதிவாகியுள்ளது. சாதாரணமாக, 100 கி.மீ. வேகத்தில் அடிக்கும் புயல் மரத்தின் கிளைகளைதான் ஆட்டும். ஆனால், கஜா புயல் அடி மரத்தையே அசைக்கும் அளவிற்கும், 2 டன் எடை கொண்ட செட்டுகளைகூட தூக்கிட்டு போகும் அளவுக்கு சக்தி கொண்டதாக இருந்தது. ஆனால், அடுத்த புயலுக்கு இவ்வளவு சக்தி கிடையாது. இனி விழுவதற்கு எதுவும் இல்லை. எல்லாம் விழுந்துவிட்டது. இதுவரை மழை இல்லாத அனைத்து வடதமிழக மாவட்டங்களுக்கும் நல்ல மழையை கொடுக்கும். இந்த புயலால் சென்னை ஏரிகள் 50 சதவீதம் நிரம்ப வாய்ப்புள்ளது. தென்மாவட்டங்களுக்கு மிதமான மழையை கொடுக்கும்.

இந்த புயல் தமிழகத்தை கடந்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக மாறும். அது 22ம் தேதி அந்தமான் வந்துவிடும். பிறகு அது மேற்கு நோக்கி இலங்கை அருகே நகரும். இது இலங்கையை கடந்து நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்திற்கு நல்ல மழையை கொடுக்கும். இனிமேல் வரும் புயல் நன்மையானதுதான். அச்சப்பட தேவையில்லை. ஆனாலும், அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Khaja 175 ,Nagy , Gaja storm, weather, information
× RELATED நாகை மாவட்டத்தில் மீன்களில்...