×

கஜா புயலால் கனமழை: அமராவதி அணை கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

உடுமலை: கஜா புயலால் கனமழை கொட்டுவதால் அமராவதி அணை நீர்மட்டம் ஒரேநாளில் 7  அடி உயர்ந்தது. உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், கஜா புயல் தாக்கம் காரணமாக அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மறையூர், காந்தலூர், தூவானம், தேனாறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில், நேற்று காலை நீர்மட்டம் 77.5 அடியாகவும், நீர்வரத்து 304 கனடியாகவும் இருந்தது. ஆனால் மதியம் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது. இன்று காலை நீர்மட்டம் 84.55 அடியாக இருந்தது. அணைக்கு 6900 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதே அளவு நீர்வரத்து நீடிக்கும்பட்சத்தில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும். இதனால் ஆற்றின்  கரையோர பகுதிகளான மடத்துக்குளம், கொழுமம், கொமரலிங்கம் உள்பட பல கிராம  மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. அமராவதி அணையில் பலத்த மழை பெய்ததால் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.  மீனவர்கள் பரிசல்களில் மீன்பிடிக்க செல்லவில்லை. பஞ்சலிங்க அருவியில் 2வது நாளாக தடை: கஜா புயல் எதிரொலியாக  திருமூர்த்திமலையில் நேற்று  கனமழை பெய்தது. பஞ்சலிங்க அருவியின்  நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை,  குழிப்பட்டி போன்ற இடங்களில் கனமழை  தொடர்ந்து பெய்தது.

இதனால்,  பஞ்சலிங்க அருவியில் நேற்று காலை 9  மணியளவில் திடீரென காட்டாற்று வெள்ளம்  ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு  கருதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல  அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து  அதிகளவு தண்ணீர் கொட்டிய நிலையில்,  மதியம் 12 மணிக்கு மீண்டும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோயில் அருகே உள்ள  விநாயகர், முருகன் கோயில் மண்டபங்கள்  நீரில் மூழ்கின. மாலை 3 மணி வரை  தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால்  பக்தர்கள் பாதுகாப்பான இடங்களில்  நிறுத்தப்பட்டனர். கோயில் நிர்வாகத்தினர், வனத்துறையினர் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்று 2வது நாளாக பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Amaravati ,area , Amravati Dam, Flood Risk Warning
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்