×

ஒரு குடம் தண்ணீர் ரூ.6 முதல் 10 வரை விற்பனை : பருவமழை பெய்தும் பயனில்லை, பொதுமக்கள் கவலை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட பெரிய கண்மாயிலிருந்து ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட ஊரணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் வார்டுகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் சப்ளை செய்யாததால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தெரு குழாய்கள் மூலம் காலை, மாலை இருவேளைகளில் தண்ணீர் சப்ளை செய்து வந்தனர்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வந்தவுடன் கட்டணம் செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. தற்போது தெரு குழாய்கள் அனைத்தும் உடைந்து வீணாகிவிட்டது. நகராட்சி தண்ணீர் சப்ளை செய்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சின்னக்கடை பகுதி மக்கள் கூறுகைளில், ‘‘பல இடங்களில் காவிரி நீர் குழாய்கள் உடைந்து தெருக்களில் வீணாக ஓடுகிறது. நகரில் வசிப்பவர்கள் குடிப்பதற்கு தேவையான நீரை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டியுள்ளது. லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீர் ஒரு குடம் ரூ.6 முதல் 10 வரை விற்பனை செய்கின்றனர்.

வேறு வழியின்றி இதனை வாங்கி தான் பயன்படுத்துகிறோம். மழை பெய்துள்ளதாலும், ஊரணியில் தண்ணீர் நிரப்பியுள்ளதாலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆனால் நகரில் பல இடங்களில் நிலத்தடிநீர் குடிக்க பயன்படுத்த முடியாத வகையில் தான் உள்ளது. சிலர் வீடுகளில் ஆர்.ஓ. பிளான்ட் அமைத்து நிலத்தடி நீரை சுத்தம் செய்து குடிக்க பயன்படுத்துகின்றனர். தினசரி கூலி வேலை செய்பவர்கள் அதை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த முடியாது. ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளிலும் ஊரணி அருகில் ஆர்.ஓ பிளாண்ட் அமைத்து சுத்தமான குடிநீரை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pitcher , Water, Monsoon, public
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனுர்...