×

திமுக ஆட்சியில் இருந்த வரை பாலாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கூட கட்டவிடாமல் ஆந்திராவை தடுத்தது: முதல்வருக்கு துரைமுருகன் பதிலடி

சென்னை: திமுக ஆட்சியில் இருந்த வரை பாலாற்றில்  ஒரு தடுப்பணை கூட கட்ட விடாமல் தடுக்கப்பட்டதாக முதல்வருக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பாலாறு பிரச்னை பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் ஏன் பேசவில்லை என்று பல பிரச்னைகளைப் போல    பாலாறு வரலாறும் தெரியாமல் கேள்வி எழுப்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்கிறேன். பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதை உறுதியாக எதிர்த்ததும், அதற்கான வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் ஆக்கபூர்வமாக நடத்தி, சாட்சிகள் விசாரணை வரைக்கும் கொண்டு வந்ததும் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த திமுக அரசுதான் என்பது ஏனோ முதல்வருக்கு தெரியவில்லை. ஏன் அன்று துணை முதல்வராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும் 5.8.2008 அன்று ஆந்திராவிற்கே நேரில் சென்று, அன்றைய ஆந்திர முதல்வர் மறைந்த ராஜசேகர் ரெட்டியை சந்தித்து தமிழகத்தின் நலனுக்கு எதிராகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் தடுப்பணைகள் கட்டப்படாது என்று உறுதிமொழியைப் பெற்று வந்தவர்கள் என்பதும் கூட முதல்வருக்கு புரியவில்லை.

அது மட்டுமின்றி, மத்திய நீர்வள ஆணையம் ஆய்வு செய்யும்வரை தடுப்பணை கட்டக்கூடாது என்று ஆந்திர மாநில அரசுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு மூலம் அறிவுறுத்த வைத்ததும் தலைவர் கலைஞர் தான் என்பதைக்கூட அறியாமல், திமுக ஆட்சியில் இருந்த வரை பாலாற்றில் ஒரு தடுப்பணை கூட கட்ட விடாமல் தடுத்து வைத்திருந்ததைக் கூடப்  புரிந்து கொள்ளாமல் ஒரு முதல்வர் மைக் கிடைத்த நேரத்தில் எல்லாம் பேட்டி கொடுப்பது விநோதமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. திமுகவை பொறுத்தவரை, கொள்கை அளவில் கூட்டணி அமைப்பதில் வெளிப்படைத்தன்மை நிறைந்த கட்சி என்பது “திடீர்க் கட்சி இணை ஒருங்கிணைப்பாளரான” முதல்வருக்கு தெரியாது. “குறைந்தபட்ச செயல் திட்டத்தை” உருவாக்கி “தேசிய ஜனநாயகக் கூட்டணியில்” திமுக இடம் பெற்றதே தவிர, எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கும் அதிமுக பிரிவு போல் பாஜவிற்கும், பிரதமர் மோடிக்கும் கை கட்டி வாய்பொத்தி நின்று “அடிமைச் சாசனம்” எழுதிக் கொடுத்து விட்டு, “மாநில உரிமைகளை மனச்சாட்சியின்றி அடகு வைத்து விட்டு” திரைமறைவில் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கவில்லை.

தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துள்ளோம் என்று கூறும் பழனிசாமி, “அதிமுக முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் அளித்த கோரிக்கை மனுக்களில் உள்ள எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?  ஊழலில் இருந்து தப்பிக்க மத்திய அரசுடன் சொந்த நலனுக்கான உறவே தவிர, தமிழக நலனுக்காக துளியும் இல்லை. பகல்வேடம் போட்டு முதல்வர் பதவியை கைப்பற்றியதாலோ என்னவோ ஒரு முதல்வர் பதவிக்குள்ள அடிப்படை நாகரீகத்தையும் பண்பாட்டையும்  இழந்து எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.  ஊழல் வழக்குகள் எந்த நேரத்திலும் விசாரணைக்கு வரும் என்பதால் இந்தப் பதற்றம்தான் வருகிறதே தவிர, தி.மு.க. கூறியிருக்கும் ஊழல் புகார்கள் ஆதாரமற்றது என்று அர்த்தம் அல்ல. ஆதாரம் இல்லாத புகார்கள் என்று கூறும் முதல்வர் நான் விசாரணையை சந்திக்கத் தயார் என்று சொல்லும் துணிச்சல் இருக்கிறதா?  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஊழல் வழக்குகள் எந்த நேரத்திலும் விசாரணைக்கு வரும் என்பதால்தான் முதல்வருக்கு பதற்றம்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,Andhra ,Thurumurugan , DMK, Andhra Pradesh, duraimurugan,
× RELATED மே 13-ம் தேதி வரை ஆந்திர அரசு பணப் பரிவர்த்தனை செய்ய தடை..!!