×

ஜேஎன்யு வன்முறை முதலாண்டு நினைவு தினம் மாணவர் சங்கம், ஏபிவிபி ஆர்ப்பாட்டம்: போலீஸ் குவிப்பு

புதுடெல்லி: ஜவகர்லால்நேரு பல்கலையில் (ஜேஎன்யு) முகமூடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலின் முதலாண்டு நினைவு தினத்தில் பல்கலை மாணவர் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) மற்றும் ஏபிவிபி அமைப்பினரும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், வளாகத்தில் வெளியில் போலீஸ் குவிக்கப்பட்டு நிலைமை பரபரப்பாக நாள் முழுவதும் நீடித்தது. கடந்த ஆண்டு ஜனவரி 5ல், முகமூடி அணிந்த கும்பல் ஜேஎன்யு வளாகத்தில் புகுந்து மாணவர் தங்கும் விடுதிகளை சூறையாடியது. குறிப்பாக சபர்மதி விடுதி சூறையாடப்பட்டு பெரும் பொருட் சேதம் விளைவித்தது. பல்கலையில் அராஜகம் அரங்கேறியும், போலீசை அழைக்காமல் நிர்வாகம் அலட்சியமாக இருந்தது என ஜேஎன்யுஎஸ்யு குற்றச்சாட்டு கூறியது. தாமதமாக வந்த போலீசார், தாக்குதலை நீடிப்பதை மவுன சாட்சிகளாக வேடிக்கை பார்த்தார்கள் என்றும் மாணவர் சங்கம் புகார் கூறியது. சுமார் 3 மணி நேரம் நீடித்த வன்முறையில் ஜேஎன்யுஎஸ்யு தலைவர் அய்ஷா கோஷ் உள்பட மாணவர்கள், ஆசிரியர்கள் என 39 பேர் படுகாயம் அடைந்து எய்ம்சில் சேர்க்கப்பட்டனர். மாணவர் விடுதி கட்டணம் தாறுமாறாக அதிகரித்ததையும், குடியுரிமை திருத்த சட்டத்தையும் ஜேஎன்யுஎஸ்யு கடுமையாக எதிர்த்ததால், நிர்வாக அனுமதியுடன், வெளியிலிருந்து குண்டர்களை உதவிக்கு அழைத்து வந்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என விவகாரம் தொடர்பாக ஜேஎன்யுஎஸ்யு குற்றச்சாட்டு கூறி, துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியது. குற்றச்சாட்டை மறுத்த ஏபிவிபி, வன்முறையை தூண்டியது ஜேஎன்யுஎஸ்யு தான் எனவும் சாடியது.கலவரம் நடந்து ஓராண்டானதை நினைவு கூறும் வகையில் ஜேஎன்யுஎஸ்யு மற்றும் ஏபிவிபியினர் பல்கலை வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து பல்கலைக்கு வெளியில் குவிக்கப்பட்ட போலீசார், நிலைமை தீவிரம் அடைந்தால் சமாளிக்க தயாராக காத்திருந்தனர். பல்கலைக்குள் ஜேஎன்யுஎஸ்யு தலைவர் அய்ஷா கோஷ் தலைமையில் மாணவர்கள், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘ஹல்லா போல்’ என கோஷங்களை எழுப்பி, மேளம் கொட்டி, பதாகைகள் ஏந்தி மனிதசங்கிலி கோர்த்து, பல்கலையில் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்ட கும்பல் மீது ஓராண்டாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டு கோஷம் எழுப்பியதால், நிலைமை பரபரப்பாக காணப்பட்டது.பதிலுக்கு ஏபிவிபி மாணவர்களும் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் டிவிட்டர் பதிவில், ‘‘அனைவருக்கும் கல்வி, சமூக நீதி, பாலின பாகுபாடின்மை கோரும் இந்த போரட்டம் ஓயாது. பிரகாச சுடர் ஆகியுள்ள ஆர்ப்பாட்டம் மேலும் வலுவடையும்’’, என ஜேஎன்யுஎஸ்யு பதிவிட்டு இருந்தது. அதே வேளையில் ஏபிவிபி ஆர்ப்பாட்டத்தில் அதன் தலைவர் ஷிவம் சவுரசியா கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு இடது சாரி மாணவர்கள் (ஜேஎன்யுஎஸ்யு) கட்டவிழ்த்த வன்முறை ஓராண்டாகியும் சுமுகமாக தீராமல் நீடிப்பது மிகவும் வேதனையும், கவலையும் அளிக்கிறது. ஏபிவிபி மாணவர்களை குறிவைத்து இரும்புத்தடி, செங்கல், கட்டைகளால் கொடூர தாக்குதல் ஏவி விடப்பட்டது. சங்கங்களை சாராத மாணவர்களும் அடி, உதைக்கு தப்பவில்லை’’, என ஆவேசப்பட்டார். ஜேஎன்யூ சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும் அது பற்றி இதுவரை எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. உரிய நீதி கிடைக்கும் வரை விவகாரத்தை மறக்கவும், மன்னிக்கவும் மாட்டோம் என ஜேஎன்யுஎஸ்யு கொந்தளித்து உள்ளது….

The post ஜேஎன்யு வன்முறை முதலாண்டு நினைவு தினம் மாணவர் சங்கம், ஏபிவிபி ஆர்ப்பாட்டம்: போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : JNU Violence First Memorial Day Student Association ,New Delhi ,Jawakarlalneuru University ,JNU ,University Student Association ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி