×

ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை கும்பல் தலைவன், கூட்டாளிகளை சேலம் அழைத்து வந்து விசாரணை: விருத்தாசலத்தில் வீடியோ பதிவு

சேலம்:  ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடித்த கும்பல் தலைவன் மற்றும் கூட்டாளிகளை சேலம் அழைத்து வந்து, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். வழியில் விருத்தாசலம், சின்னசேலத்திலும் ரயில் கொள்ளை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வீடியோ பதிவு செய்தனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2016 ஆகஸ்ட் 8ம்தேதி, ரயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 ஆண்டுகளுக்கு பிறகு, மத்திய பிரதேசத்தை சேர்ந்த கும்பல் தலைவன் மோஹர்சிங் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

இவர்களை 14 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் சென்னையில் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பல் தலைவன் மோஹர்சிங் உள்பட 7 பேரிடமும் சிபிசிஐடி போலீசார், இந்தி மற்றும் மராத்தி ெதரிந்த போலீசார் மூலம்,  கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ரயில் கொள்ளையர்களை சேலத்திற்கு அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்ட சிபிசிஐடி போலீசார், நேற்று விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். அங்குள்ள 1வது பிளாட்பாரம் மற்றும் தண்டவாளத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது கொள்ளையர்கள் எப்படி ரயிலில் ஏறினர், பெட்டியில் எப்படி துளையிட்டனர், உள்ளே சென்று பணத்தை கொள்ளையடித்தனர் என நடித்துக் காட்ட வைத்து வீடியோ பதிவு செய்தனர்.

மேலும், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். பின்னர் சின்னசேலம் ரயில் நிலையத்துக்கு அழைத்து சென்று எங்கு மறைந்திருந்தனர் என்று விசாரணை நடத்தினர். இதையடுத்து சேலத்திற்கு பகல் 12 மணியளவில் அழைத்து வந்தனர். இவர்களை ஜங்ஷன் கூட்ஸ்ஷெட் பகுதிக்கு அழைத்து சென்றனர். உடனடியாக அங்கிருந்து கொள்ளையர்களை அழைத்து கொண்டு வேகமாக சென்று விட்டனர். டெம்போவில் இருந்து கொள்ளையர்களை இறக்கவில்லை. கொள்ளை நடந்த எக்ஸ்பிரஸ் ரயிலை சம்பவத்தின்போது பின் தொடர்ந்து யாரெல்லாம் சென்றார்கள்? எந்த ஸ்டேஷனில் யாரெல்லாம் ஏறினார்கள் என்பது குறித்து விசாரித்தனர்.  

இதற்கிடையில் பணம் கொண்டு சென்ற பெட்டிக்கு, சேலம் மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் நாகராஜ் மற்றும் 9 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பணியில் இருக்கும் போது இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சிபிசிஐடி அதிகாரிகள் அறிக்கை கொடுக்கும் பட்சத்தில், கவனக்குறைவாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

செல்போன் சுவிட்ச்ஆப்
கொள்ளையர்களை சேலத்திற்கு அழைத்து வரும் தகவலை, சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். இதுகுறித்து யாரும் எந்த தகவலும் தெரிவிக்கக்கூடாது என அப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஒவ்வொருவருடைய செல்போனும் சென்னையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என கூறியதால், நேற்று அதிகாரிகள் அனைவரும் தங்களது செல்போனை சுவிட்ச்ஆப் செய்து வைத்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : robbery gang leader ,colleagues ,Salem , Undecided,robbery,gang leader,come,Salem,video,recording,viruthachalam
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!