×

சென்னை ஏரிகளில் 15 நாட்களுக்கு மட்டுமே நீர் இருப்பு: குடிநீர் பிரச்னையை தீர்க்க வாரியம் என்ன செய்யப் போகிறது?

சென்னை: மெட்ரோ பாலிட்டன் நகரங்களில் 4வது இடத்தில் உள்ள சென்னை 426 ச.கி.மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கள் முதல் மாநிலங்களில் இருந்து பலதரப்பட்ட மக்கள் பிழைப்பு தேடி சென்னைக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய மக்கள் தொகை ஒன்றரை கோடியை தாண்டுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சீரான குடிநீர் கிடைக்கிறதா என்றால் மில்லியன் டாலர் கேள்வி குறிதான். குடிநீர் பிரச்னைக்காக மாற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமோ எந்த முயற்சியும் எடுக்காமல், இருக்கிற திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் வருங்கால சென்னை வாசிகள் ஒரு குடம் தண்ணீருக்காக ஏங்கி நிற்கும் அவல நிலைக்கு ஆளாகும் காலம் வெகு தூரம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

சென்னையை பொறுத்தவரை வர்த்தகம், தொழிற் உற்பத்தி என பொதுமக்களுக்கு நாள் தோறும் சராசரியாக 831 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் சென்னைக்கான குடிநீர் ஆதாரங்களில் அந்த அளவுக்கு தண்ணீர் இல்லாததால், 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. இது நீர் இருப்பை பொறுத்து குறைக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் வற்றாத ஆறுகள் என எதுவும் சென்னையை சுற்றி இல்லை என்பது தான். இருக்கின்ற நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்கி எங்கே இருக்கிறது என்று தேடும் நிலையே உள்ளது. இதனால் இருக்கின்ற நீராதாரங்களை பயன்படுத்தி மட்டுமே குடிநீரை விநியோகிக்க வேண்டிய கட்டாயம் சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிப்பது என்பது குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு பருவமழை காலமான நவம்பர் மாதத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் சூழ்நிலை சென்னை மக்களுக்கு உருவாகி வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில் தண்ணீர் குறைந்து வருவதே இதற்கு காரணம். இதனால் குடிநீர் வழங்குவது 450 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் லாரி தண்ணீர் மூலம் குடிநீர் பிரச்னை சமாளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் பெய்யக்கூடிய மழை நீர் சீரான குடிநீருக்கு வழிவகுக்கும். அதோடு இப்போது கிடைக்கக்கூடிய தண்ணீர் கோடை காலம் வரை சமாளிக்க உதவும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையும் பொய்த்துவிட்டது. வடகிழக்கு பருவமழை மூலம் ஓரளவு தண்ணீர் வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் போதிய மழை பெய்யவில்லை.

வருண பகவான் கருணை காட்டவில்லை என்றால் இன்னும் சில நாட்களில் கடுமையான குடிநீர் பஞ்சத்தை சென்னை மக்கள் சந்திக்கும் நிலை ஏற்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை.சென்னையை பொறுத்தவரை சென்னை ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீரை தவிர, மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. இதுதவிர வீராணம் ஏரி மூலம் 90 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். ஆனால் அங்கு தற்போது தண்ணீர் குறைவாக உள்ளதால் சென்னைக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இது தவிர ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி 12 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். அதாவது முதல் தவணை காலமான ஜூலை முதல் அக்டோபர் வரை 8டிஎம்சியும், இரண்டாவது தவணை காலமான ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4டிஎம்சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை தமிழகத்துக்கு முழு அளவில் ஆந்திர அரசு தண்ணீர் தந்ததே இல்லை.

ஆண்டுதோறும் தமிழக அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து குறிப்பிட்ட அளவு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. அதையும் ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா கால்வாயில் ஆங்காங்கே அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சிவிடுவார்கள். உதாரணமாக, 2 டிஎம்சி தண்ணீர் திறந்தால் வெறும் அரை டிஎம்சி தண்ணீர் கூட பூண்டி ஏரியை வந்தடைவதில்லை. காலம் காலமாக நடக்கும் இந்த தண்ணீர் திருட்டை தடுக்க தமிழக அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுத்ததில்லை. இதுவே குடிநீர் பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது.இப்படி மாற்று திட்டங்கள் மூலம் கிடைக்கும் குடிநீருக்கு பல்வேறு தடங்கல்கள் உள்ளன.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் கிடைக்கக்கூடிய 200 மில்லியன் லிட்டர் குடிநீரை மட்டுமே நம்பலாம். வேறு திட்டங்கள் எல்லாம் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்பதால் மழையை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே மாற்று வழிகள் எத்தனை இருந்தாலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது குடிநீர் ஆதாரங்களாக திகழக்கூடிய பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், ேசாழவரம் ஆகிய 4 ஏரிகள் மட்டுமே. இந்த ஏரிகளைக்கூட முறையான பராமரிப்பு செய்யாததால் தண்ணீர் வீணாகக்கூடிய நிலையே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த 4 ஏரிகளிலும் 4 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 591 மில்லியன் கனஅடியும், சோழவரம் ஏரியில் 22 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 902 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 202 மில்லியன் கன அடி என மொத்தம் 1717 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.

கடந்த மாதம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் பூண்டி ஏரிக்கு 1.58 டிஎம்சி தண்ணீர் வந்தது. அதை வைத்து தான் இதுவரை குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதையும் கடந்த வாரம் ஆந்திர அரசு நிறுத்தி விட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது. தற்போது இந்த 4 ஏரிகளையும் சேர்த்து 1.7டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. பருவமழை காலம் என்பதால் மாற்று திட்டங்கள் குடிநீர் பெறுவது குறித்து சென்னை குடிநீர் வாரியம் இதுவரை எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் 1.7டிஎம்சி தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும்.வடகிழக்கு பருவமழை பெய்யாதபட்சத்தில் சென்னை மக்கள் இன்னும் சில நாட்களில் பெரும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதால் ஆழ்துளை கிணறுகள் எல்லாம் வறண்டு சென்னை மக்கள் கடும் தண்ணீர் பிரச்னையை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், மெட்ரோ வாட்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டால் மீண்டும் ஒரு கோடை கால குடிநீர் பஞ்சத்தை சென்னை மக்கள் சந்திப்பது நிச்சயம். இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வழக்கமாக இதுபோன்ற பருவமழை காலங்களில் தண்ணீர் பிரச்னை வராது. மழை பெய்து தண்ணீர் வந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் ஏரிகளின் நீர் மட்டம் குறைந்து வருவது உண்மை தான். அதற்கான மாற்று வழிகளை தேடுவதில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கோடை காலத்தில் எப்படி குடிநீர் தேவையை சமாளித்தோமோ அதேபோன்று இப்போதும் சமாளிக்க தயாராக இருக்கிறோம்.

சென்னையை சுற்றியுள்ள 22 கல்குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை ஆய்வு செய்து சுத்திகரித்து குடிநீர் வழங்குவது, அப்போதும் பற்றாக்குறை ஏற்பட்டால் போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பது போன்ற பல மாற்று வழிகளை செயல்படுத்துவோம். கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டால் நெய்வேலி சுரங்கத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்யும். இப்படி பல மாற்று வழிகள் உள்ளது. அதன் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

வீணாகும் மழை நீர்
சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டாலும் சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் இந்த 4 ஏரிகளுக்கு மழைநீர் செல்வதில்லை. இதற்கு காரணம் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கியுள்ளதால் மழைநீர் செல்வது தடைபட்டுள்ளது. இதனால் ஏரிகளுக்கு செல்லக்கூடிய மழை நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. ஏரிகளுக்கு செல்லக்கூடிய கால்வாய்களை மீட்டு மழைநீர் செல்லும் வகையில் திருப்பி விட்டால் ஏரிகளுக்கு போதிய மழைநீர் வந்தடையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lakes ,Chennai ,Board , Chennai Lake, Water Reserve, Drinking Water
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...