×

மதுராந்தகம், செங்குன்றத்தில் பரபரப்பு : கல், மணல் குவாரியை மூடக்கோரி முற்றுகை, சாலை மறியல்

சென்னை: மதுராந்தகம், செங்குன்றத்தில் கல்குவாரியை மூடக்கோரி முற்றுகை போராட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் முருக்கம்பாக்கம் ஊராட்சியில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கற்களை உடைக்க குவாரியில் வெடி வைக்கும் போது அதன் பயங்கர சத்தத்தால் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  மேலும், அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டுவதால் நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். கல்குவாரிக்கு வரும் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

இதனால் கடந்த வாரம் மதுராந்தகம் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி தலைமையில் சிறப்பு முகாம் நடந்தது. அதில், கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை திமுக எம்எல்ஏ புகழேந்தி தலைமையில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள், குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லாததால் எம்எல்ஏ புகழேந்தி, 70 பெண்கள் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. அதன் பின்னர் மாலை அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.   

செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த ஞாயிறு ஏரியில் அரசு அனுமதியுடன் மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு பொக்லைன்  மூலம் இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு, கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இங்குள்ள மணல் குவாரியை மூட வலியுறுத்தியும், லாரிகளில் மணல் எடுத்து செல்லப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரியும் நேற்று காலை ஞாயிறு கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பொன்னேரி டிஎஸ்பி ராஜா, சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட முயன்ற மாவட்ட செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் சந்தானம், வெள்ளையன், சித்ரா உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை காரணோடையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sand quarry moped blockade , Maduranthagam, Sengundram, Gulwavari, Siege Struggle
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...