×

மீண்டும் தலைதூக்கும் புளூவேல் பயங்கரம்

* பெங்களூரு சிறுவன் சென்னையில் தற்கொலை முயற்சி
* பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னை: புளூவேல் கேம் விளையாடி அதன் கட்டளைக்கு ஏற்ப சென்னை வந்து தற்கொலைக்கு முயற்சித்த பெங்களூருவை சேர்ந்த சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த நிகழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த சிறுவன் அரவிந்த்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக வீட்டிலிருந்து மாயமானார். இதுபற்றி அவனது பெற்றோர் பெங்களூருவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் மற்றும் சிறுவனின் பெற்றோர் தேடும் முயற்சியில் இறங்கினர்.

இந்நிலையில், சிறுவனின் பெற்றோர் அவர்களது வீட்டில் இருந்த கம்பியூட்டரை திறந்துபார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அதில், மாயமான சிறுவன் புளூவேல் கேம் விளையாடியது தெரியவந்தது. மேலும், ‘’பாலத்தின் மீது செல்லும் காரின் மீது மோதி விபத்து உண்டாக்க வேண்டும்’’ என கட்டளை பதிவாகியிருந்தது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் சிறுவனின் இ-மெயில் முகவரி உள்ளிட்ட அனைத்தையும் திறந்து பார்த்தனர். அப்போது, சிறுவன் சென்னையிலிருப்பது தெரியவந்தது.
குறிப்பாக, சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்காக ஆன்லைனில் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதும், டிக்கெட்டின் நகல்  அதில் பார்வேடு செய்யப்பட்டதையும் கண்டறிந்தனர்.

மேலும், பேருந்து நேற்று முன்தினம் இரவு11.10க்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து புறப்படும் என்பதை டிக்கெட்டிலிருந்து அறிந்துகொண்ட சிறுவனின் பெற்றோர், பெங்களூருவில் உள்ள தனது நண்பரின் உதவியை நாடினர். இதையடுத்து அவரும் தான் வேலை செய்யும் தனியார் வங்கியின் சென்னை கிளையில் பணியாற்றும் அம்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். சிறுவன் பேருந்து நிலையத்தை அடைந்தவுடன் அங்கு சென்று அவனை மீட்டு கஸ்டடியில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுமாறு நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு மணிகண்டனிடம் கூறினர்.

இதையடுத்து, கோயம்பேடு சென்ற மணிகண்டன் சம்பந்தப்பட்ட பேருந்தை கண்டறிந்து அங்கு சென்று சிறுவனின் வருகைக்காக காத்திருந்தார். அப்போது இரவு சுமார் 11 மணியளவில் அந்த சிறுவன் அங்கு வந்தான். அவனுடன் மற்றொரு நபரும் வந்திருந்தார். இதையடுத்து அங்கு சென்று அவர்களிடத்தில் மணிகண்டன் விசாரித்தார். அப்போது, சிறுவனோடு வந்த அந்த நபர் கூறுகையில், “அம்பத்தூர் மேம்பாலம் மீது காரில் வந்துகொண்டிருந்தபோது, எங்களது காரில் மோதி சிறுவன் கீழே விழுந்தார். அதில் அவரது முகம் மற்றும் காலில் பலத்த அடிப்பட்டு ரத்தம் சொட்டியது.

இதனால் சிறுவனை மீட்டு வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தோம். பின்னர் சிறுவனிடம் பேசியதில் பெங்களூரை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. அவனிடம், பணம், முகவரி என எதுவும் இல்லை. இதையடுத்து எனது செலவில் பெங்களூருவுக்கு ஆன்லைனில் பேருந்து டிக்கெட் பதிவு செய்தேன். சிறுவன் எதற்கும் உரிய முறையில் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டதால் அவனுடன் வந்து பஸ் ஏற்றி விடுவதற்காக கோயம்பேடு வந்தேன்”என கூறினார்.

இந்த விவரத்தை சிறுவனின் பெற்றோருக்கு மணிகண்டன் தெரிவித்தார். இதனால் பதற்றமடைந்த சிறுவனின் பெற்றோர் “அவனை வேறு எங்கும் விட்டுவிட வேண்டாம். பேருந்திலும் ஏற்றிவிட வேண்டாம்.  வழியில் இறங்கி வேறு இடம் செல்ல வாய்ப்புண்டு. எனவே, அவனை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடுங்கள். நாங்கள் நாளை காலையில் சென்னை வந்து அழைத்து செல்கிறோம்” என  மணிகண்டனிடம் தெரிவித்தனர். அதன்படி, அந்த சிறுவனை பாதுகாப்பாக அழைத்து சென்று கோயம்பேடு காவல் நிலையத்தில் மணிகண்டன் ஒப்படைத்தார். நேற்று காலை சென்னை வந்த பெற்றோரிடம் கோயம்பேடு போலீசார் சிறுவனை ஒப்படைத்து அவனுக்கு அறிவுரை வழங்கி உடன் அனுப்பி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : chennai,Repeat,blue whale
× RELATED கடலில் கலந்து மழைநீர் வீணாவதை தடுக்க...