மெடிக்கல் எமர்ஜென்சி அறிவிக்காதது அரசின் பெரும் தவறு: டாக்டர் என்.எஸ்.கனிமொழி, திமுக மருத்துவர் அணி செயலாளர்

சென்னை: டெங்கு, பன்றிகாய்ச்சல் பருவகாலத்தில் வரக்கூடிய நோய்கள். பருவகாலம் வரும் என்பதை அரசு தான் கவனித்து இருக்க வேண்டும். அதாவது, இந்த காலத்தில் இவ்வளவு மழை பெய்யும், சீதோஷ்ண நிலை மாறும் என்று அரசுக்கு நன்றாகவே தெரியும். இவ்வாறு ஒரு நிலை  வரும் போது சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அவற்றை தடுத்து இருக்கலாம். ஒவ்வொரு மண்டலமும், வார்டு வாரியாக 10 நாட்களுக்கு ஒரு முறை கொசு பரவுவதை தடுக்க மருந்து அடிக்கலாம். பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை மருந்து தெளிப்பு நடவடிக்கை ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அரசிடம் போதிய மருந்து கையிருப்பில் இல்லை. ்அதனால், மருந்து தெளிப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

பள்ளி மட்டுமின்றி வார்டு, மண்டல வாரியாக இந்த விழிப்புணர்வு முகாமை நடத்த வேண்டும். தொலைக்காட்சி, செய்தித்தாள், வாட்ஸ் அப் வாயிலாகவும் இந்த விழிப்புணர்வை செய்து இருக்கலாம். ஆனால், அரசு இதை செய்ய தவறி விட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு டெக்னீசியன்கள் கூட இல்லை. 3 டெக்னீசியன்கள் இருக்க வேண்டிய மருத்துவமனைகளில் ஒருவர் கூட இல்லை. டெக்னீசியன்கள் இல்லாமல் எங்கே போய் ரத்த பரிசோதனை செய்வார்கள்.
 ஒரு வீட்டில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவர்கள் என்ன தான் செய்ய முடியும். இதில், மருந்து, மாத்திரை வேறு வாங்க வேண்டும். அந்த மருந்து மாத்திரைகள் எளிதாக கிடைக்காது.

இப்படிபட்ட சூழ்நிலையில் அரசு பீவர் கிளினிக் அமைத்து இருக்க வேண்டும். அரசு ஆரம்பித்திருப்பதாக கூறுகின்றனர். ஆனால், எனக்கு தெரிந்து பீவர் கிளினிக் எங்கும் அமைக்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வந்தவுடன் டெங்கு பரிசோதனை செய்வதும் கிடையாது. அட்மிஷனுக்கு தேவையான பெட் வசதி அரசு மருத்துவமனைகளில் கிடையாது. காய்ச்சல் தீவிர மடைந்து வரும் நிலையில், நமக்கு இவ்வளவு ேநாயாளிகள் வருவார்கள் என்று முன்கூட்டியே கணித்து அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து இருக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை.

டெங்குவை நாம் எளிதாக தடுக்கலாம். ஆனால், அந்த நோயை பரவவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறோம். டெங்குவால் உயிரிழிப்பு, ஏற்பட்டு விட்டதே என்று பேசி கொண்டே இருக்கிறோம். பன்றி காய்ச்சல் ஒவ்வொரு வருடமும் வைரஸ் மாறும். அந்த வைரஸ் என்ன என்று, பருவ காலம் மாறும் போது இரண்டு நோய்கள் அட்மிட் ஆகும் போது கண்டுபிடித்து விடலாம். ஆனால், அரசு சார்பில் அந்த நோய்க்கான மாத்திரை, மருந்துகளை தயாரித்து வைத்திருக்க வேண்டும். அந்த மாத்திரை, மருந்துகளை தயார் செய்து இருக்க வேண்டும்.

அந்த மாத்திரகைளை குழந்தைகள், பெரியவர்கள், பிரசவமாக இருக்கும் பெண்களுக்காவது அந்த மாத்திரைகளை இலவசமாக தந்து இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறி விட்டது. டெங்கு, பன்றிக்காய்ச்சலால் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இது, ஜனவரி மாதம் வரை போகும். இந்த நேரத்தில் மெடிக்கல் எமர்ஜென்சியை அரசு அறிவித்து இருக்க வேண்டும். அப்படி அறிவித்து நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் பலமுனைகளில் இருந்தும் எடுத்திருக்க வேண்டும். அரசு அதில் அறவே தோல்வி  அடைந்து விட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வாட்ஸ் அப் அழைப்பில் நடந்த தவறை...