×

ரன்வீர் ஷாவை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி பேட்டி

சென்னை: சென்னையில் கிண்டியில் உள்ள ரன்வீர் ஷா அலுவலகத்தில் இருந்து 500 ஆண்டுகள் பழமையான 5 பெருமாள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து காணாமல் போன புராதாண சிலைகளை மீட்டெடுக்க ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் தீவிரமாக போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் வீட்டில் முன்னர் நடத்தப்பட்ட சோதனையில் 247 சிலைகள் மற்றும் கல்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், அவரது பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இன்று கிண்டியில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் நந்தி, கருடன் சிலைகள், 500 ஆண்டுகள் பழமையான 5 பெருமாள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரம், கைப்பற்றப்பட்ட தேர்பவனி வாகனங்கள் தொன்மை வாய்ந்தது எனவும், இதுதொடர்பாக ரன்வீர்ஷா மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ரன்வீர் ஷாவை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரன்வீர்ஷாவின் வழக்கறிஞர், தேர்பவனி வாகனங்கள் தொன்மை வாய்ந்தது இல்லை எனவும், அதற்கான ஆவணங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranveer Shah ,statue detention unit DSP interview , Ranveer Shah, Arrest, Statue Prevention Division DSP
× RELATED சிலைக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய...