×

ராகுல் - சந்திரபாபு சந்திப்புக்குப்பின் தேர்தல் பிரசார யுக்தியை மாற்றுகிறது டிஆர்எஸ்: எதிர்பாராத திருப்பத்தால் அதிர்ச்சி

ஐதராபாத்: தேர்தல் பிரசார யுக்திகளை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மாற்றி அமைக்கிறது. தெலங்கானாவுக்கு அடுத்தாண்டு மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், தற்போது நிலவும் சாகமான சூழலை பயன்படுத்தி சட்டப்பேரவை தேர்தலை முன்கூட்டியே சந்திக்க  தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் முடிவு செய்து சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரை செய்தார். இதையடுத்து, அங்கு அடுத்த மாதம் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி வேட்பாளர்களையும் அறிவித்து தீவிர பிரசாரத்தில் டிஆர்எஸ் இறங்கியுள்ளது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடந்த 1ம் தேதி சந்தித்து பேசினார். பின் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். தெலுங்கு தேசம் - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள புதிய உறவால் அரசியல் நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை டிஆர்எஸ் கட்சி கற்பனை செய்துகூட பார்க்கவில்லை.  வெற்றி வாய்ப்பு குறித்த அச்சத்தையும் டிஆர்எஸ்.சுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து டிஆர்எஸ் கட்சி தலைவர்கள் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியைத்தான் முக்கிய எதிர்க்கட்சியாக கருதி வந்தோம். சந்திரபாபு நாயுடு காங்கிரசுடன் இணைந்து, அந்த கட்சிக்காக தனது விளையாட்டை ஆரம்பித்துள்ளார். தெலங்கானா விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் சந்திரபாபு நாயுடுவை, சந்திரசேகர ராவ் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். சந்திரபாபு நாயுடு அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை அவர் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார்’’ என்றனர்.  அரசியல் சூழல் மாற்றத்தால் தேர்தல் பிரசார யுக்திகளை மாற்றியமைப்பது குறித்தும் டிஆர்எஸ்  தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். ஆடியோ-வீடியோ பிரசாரம் மூலம் மக்களுக்கு தனது கருத்தை தெரிவிப்பதில்  முதல்வர் சந்திரசேகர ராவ் ஆர்வம் காட்டுவதாக டிஆர்எஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். தெலங்கானாவில் சில இடங்களில் பிரசாரத்துக்கு சென்ற டிஆர்எஸ் வேட்பாளர்களிடம் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதிருப்தி வேட்பாளர்களை மாற்றுவது பற்றியும் டிஆர்எஸ் ஆலோசித்து வருகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul-Chandrababu ,TRS ,turnaround , Rahul-Chandrababu, Transforms ,Election Campaign ,TRS,Unexpected Turn
× RELATED சென்னையில் வெள்ள பாதிப்புக்கு...