×

வேளாண்மைக்கு பெயர் பெற்ற தொகுதியான கம்பத்தில் யார் கொடி பறக்கும்?

தேனி மாவட்டம், கம்பம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,39,619 பேர்,  பெண் வாக்காளர்கள் 1,45,918 பேர், இதரர் 37 பேர் என மொத்தம் 2 லட்சத்து 85  ஆயிரத்து 574 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சைக்கு அடுத்ததாக…:கம்பம் தொகுதியில் பெரிய அளவில்  சொல்லிக்கொள்ளும்படி தொழிற்சாலைகள் எதுவுமே இல்லை. விவசாயம் மட்டுமே முதல் பணியாக   இப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர். தஞ்சை நெற்களத்திற்கு அடுத்தபடியாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அதிகளவில் நெல், வாழை, தென்னை,  திராட்சை, கரும்பு ஆகியவை பயிரிடப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு  முல்லை பெரியாற்று பாசனம் மூலம் பத்தாயிரம் ஹெக்டேர் நெல் விவசாயம்  நடைபெறுகிறது. முப்போகம் விவசாயம் செய்யக்கூடிய சிறப்புக்குரியதாகவும்  கம்பம் தொகுதி இருக்கிறது. ‘ஏலம்’ போகும் உயிர்…: கடந்த 2016ல்  வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ ஜக்கையன் தொகுதிக்கு சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் செய்யவில்லை என்ற குறைபாடு எங்கு போனாலும் ஓங்கி ஓலிக்கிறது. குறிப்பாக தினமும்  ஆயிரக்கணக்கான பெண்கள் அண்டை மாநிலமான கேரளவில் ஏலத்தோட்டத்திற்கு கூலி  வேலை சென்று வருகின்றனர். தினமும் 1,500 ஜீப்களில் உயிரை பணயம் வைத்து, தினமும் 100  கிமீ  வளைவு சாலைகளில் கேரளாவிற்கு பயணம் செய்து கூலி வேலைக்கு செல்கின்றனர். ஜீப்புகளுக்கிடையே முந்தி செல்வதில் ஏற்படும் வேகத்தால்   விபத்து ஏற்பட்டு பல அப்பாவி கூலி தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளனர். இதற்கு மாற்று வசதிகள் செய்யப்படவில்லை. ஆலை.. இல்லை…:கம்பம் பகுதியில்  திராட்சை மற்றும் வாழை பதனிடும்  தொழிற்சாலை உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்த ஜக்கையன் அதை கண்டு கொள்ளவில்லை. தொழிற்சாலைகள் கட்டப்பட்டிருந்தால் தொகுதியில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மேலும், விபத்துகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், தலைக்காய சிகிச்சை பிரிவு இல்லையென தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்புகின்றனர். கிட்டத்தட்ட 50 கிமீ தொலைவில் உள்ள தேனி அரசு மருத்துவ கல்லுரிக்கு கொண்டு செல்லும்  முன் விபத்தில் காயம்பட்டவர்கள் உயிரிழந்து விடுகின்றனர். இப்பிரச்னையை  போக்க  கம்பம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம்  உயர்த்தவும், தலைக்காய பிரிவு தொடங்கவும் மக்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அகல பாதை என்னாச்சு? :கம்பம் மையப்பகுதியில் ஓடும் சேனை  ஓடையை தூர் வாரி அதனை சுற்றியுள்ள ஆக்ரமிப்பை அகற்ற முன்  வரவில்லை. கம்பத்தின் ஒட்டு மொத்த  கழிவு நீர் குளமாக மாறிய வீரப்ப நாயக்கன்  குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தவில்லை. கம்பத்தின் நீராதாரமாக விளங்கிய புதுக்குளத்தை  தனி நபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவில்லை. பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர மாற்று ஏற்பாடும்  செய்யவில்லை. போடியில் இருந்து லோயர்கேம்ப் வரை அகல ரயில் பாதையை நீட்டிக்க  வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையும் காற்றில் கரைந்துள்ளது. கம்பம்  நகர் முழுக்க ஆக்கிரமிப்பே அதிகளவு உள்ளது.  ஆக்கிரமிப்பை தடுக்க துளியளவும் நடவடிக்கை எடுக்கவில்லை. தோல்வி சூழல்…:மலை போல குவிந்து கிடக்கும் தொகுதிக்கான தேவைகளில் எதையுமே கடந்த கால அதிமுக அரசு செய்யாதது மக்களை ஆத்திரத்திற்கு ஆளாக்கி, அதிமுகவிற்கு எதிரான உணர்வை வாக்காளர்களுக்கு தந்துள்ளது.  இத்துடன்,  கம்பம் தொகுதியில் மீண்டும் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் ஜக்கையன். ஆனால், ஓபிஎஸ் தனது ஆதரவாளரான மாவட்ட செயலாளர் சையது கானுக்கு சீட் ஒதுக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜக்கையன் ஆதரவாளர்கள் மற்றும் சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வருவது அதிமுகவிற்கு தோல்வி சூழலைத் தந்திருக்கிறது. மேலும், எடப்பாடியின் தீவிர ஆதரவாளரான ஜக்கையன் புறக்கணிக்கப்பட்டிருப்பது, தேனி மாவட்ட அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.எதிர்ப்பு அலை…:கம்பம் தொகுதியில் முக்குலத்தோர், கவுண்டர்களுக்கு அடுத்தபடியாக உள்ள முஸ்லீம்கள் ஓட்டை குறி வைத்து அதிமுக தரப்பில் சையது கானுக்கு சீட் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டணியில் பாஜ உள்ளதால், முஸ்லீம் மக்கள் ஓட்டு சையதுகானுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. தொகுதியில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு சிறுபான்மை மக்களின் ஓட்டு வங்கி உள்ளது. ஆனாலும், பாஜ எதிர்ப்பு அலையால் சையதுகான் கரையேறுவது சிரமம்தான்.அனுபவம் கை கொடுக்கும்…:

திமுகவை பொறுத்தவரை தொகுதியில் மும்முறை  எம்எல்ஏவாக இருந்து, பல்வேறு நலத்திட்டங்களை  நிறைவேற்றிய கம்பம் ராமகிருஷ்ணன் களம் காண்கிறார். 1989, 2006, 2009  மற்றும் 2011 என நான்கு முறை கம்பம் தொகுதியில் திமுக சார்பில் களம்  கண்டவர் ராமகிருஷ்ணன். தொகுதியில் அதிக ஓட்டு வங்கியுள்ள சமூகத்தைச்  சார்ந்தவர் என்பதும் பலம். அமமுக வேட்பாளர் சுரேஷ். இவர் சார்ந்த சமுதாய மக்களின் ஓட்டுகள் வாய்ப்பால், அதிமுகவிற்கான ஓட்டுகள் பிரியும் நிலை இருக்கிறது. இதுதவிர மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வெங்கடேசன், நாம் தமிழர் வேட்பாளராக அனீஷ்பாத்திமா உள்ளிட்ட கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் களம் கண்டபோதும், திமுக, அதிமுக அமமுக என்ற மும்முனைப்போட்டியே நிலவுகிறது.

 திமுக வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் மீது தொகுதியில் நல்ல பெயர் உள்ளது. இவருக்கும் கூட்டணி பலமும் கைகொடுக்கும் சூழல் இருக்கிறது. கடந்த கால அதிமுக ஆட்சி மீதான அதிருப்தியால், கம்பத்தில் இம்முறை திமுக கொடி பறக்கவே வாய்ப்புகள் அதிகம் உண்டு….

The post வேளாண்மைக்கு பெயர் பெற்ற தொகுதியான கம்பத்தில் யார் கொடி பறக்கும்? appeared first on Dinakaran.

Tags : Gamba ,Theni district ,Gampam ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை...