×

தீபாவளி பண்டிகை பயணிகள் நெரிச்சலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணக் கொள்ளை

* சட்டரீதியாக தடுக்க முடியாது என்கிறார் அமைச்சர்
* கண்டுகொள்ளாத அரசு மீது மக்கள் குற்றச்சாட்டு

சென்னை: தீபாவளி விடுமுறையை பயன்படுத்தி ‘ஆம்னி’ பஸ்சில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் இருப்பதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வரும், 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர் செல்வோரின் வசதிக்காக, 5ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் ஞாயிறுக்கிழமையாக இருக்கிறது. இதனால் பண்டிகையை குடும்பத்துடன் செலவிட விரும்புவோர், இன்று அல்லது நாளை இரவே, சொந்த ஊருக்கு செல்வார்கள். அவ்வாறு செல்வோரில் பாதுகாப்பாகாவும், சவுகர்யமாகவும் பயணிப்பதற்கு, பெரும்பாலானோர் ரயில்களை தேர்வு செய்வார்கள். ரயில்களில் குறிப்பிட்ட சில நேரங்கள் மட்டுமே முன்பதிவு ‘டிக்கெட்’ இருக்கும் என்பதால், பிறகு பஸ் பயணத்தையே மக்கள் நாட வேண்டியிருக்கிறது.

இதிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படாத காரணத்தினாலும், போதிய வசதிகள் இல்லை என மக்கள் கருதுவதன் காரணமாகவும், அவர்கள் தனியார் ‘ஆம்னி’ பஸ்களை நோக்கி செல்கின்றனர். வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 2275 பஸ்கள் இயக்கப்படும். தற்போது 1300 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு, 3575 பஸ்கள் வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது. நேற்று வரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். ஆனாலும், பொதுமக்கள் அரசு பஸ்களில் குறைவாகவே பயணம் செய்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக ‘ஆம்னி’ பஸ் உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

அவர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர்.  இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மக்கள் போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், சொல்லிக்கொள்ளும்படியான நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும், ஆம்னி பஸ்களில் சனி, ஞாயிறு தினங்களில் கட்டணமாக, ரூ.600 - 1500 வரையிலும், சென்னை - கோவைக்கு இயக்கப்படும் வண்டிகளில், ரூ.700 - 1,700 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி, ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் இருந்து கூடுதலாக ரூ.500 - ரூ.1,200 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது மதுரைக்கு ரூ.1100ல் இருந்து ரூ.2700 மற்றும் ரூ.3000 வரை வசூலிக்கப்படுகிறது. அதில், குளிர்சாதன வசதி பேருந்துக்குத்தான் அதிகமாக ரூ.3000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னரே தனியார் பஸ்களில் டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டதாக அறிவித்துள்ளனர். இதனால், கூடுதல் கட்டணம் கொடுத்தால், சீட்டுகள் தருவதாக தற்போது பேரம் பேசப்பட்டு வருகிறது. விமானங்களுக்கு இணையாக தற்போதே கட்டணக் கொள்ளை ஆரம்பமாகிவிட்டது. மேலும் கூட்டத்தை காரணம் காட்டி பழைய, ஓடாத பேருந்துகளையும் இயக்க தனியார் பேருந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஆம்னி பஸ்களை கட்டுப்படுத்த சட்டம் இல்லை
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் புகார் செய்யலாம். ஆம்னி பஸ் கட்டணத்தை பொறுத்தவரை இந்திய மோட்டார் வாகன சட்டப்படி கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை. ‘கான்ட்ராக்ட் கேரேஜ்’ என்பதால் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இருக்கும். இருந்தாலும் பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கிறோம். கடந்த ஆண்டு 36 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இப்போதும் கண்காணிப்பு குழு போட்டுள்ளோம். ஆம்னி பேருந்து கட்டணங்களை மாநில அரசு நிர்ணயிக்க முடியாது. மத்திய அரசு தான் செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் இந்த பிரச்னை இருக்கிறது. தமிழக போக்குவரத்து துறை மூலம் 22,000 பேருந்துகளை இயக்குகிறோம்.

ஏன் ஆம்னி பேருந்துகளுக்கு மக்கள் செல்கின்றனர். எவ்வளவு பயணிகள் வந்தாலும் அவர்கள் பயணிக்க வசதி செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம். தனியாருக்கு சமமாக நாங்கள் தூங்கும் வசதி கொண்ட பஸ்களை விடுகிறோம். சென்னை மட்டுமல்ல மற்ற ஊர்களுக்கும் புஷ் பேக் வண்டி விடப்படும். இப்படி வசதிகள் இருந்தும் சிலர் ஆம்னி பஸ்களுக்கு செல்கின்றனர். அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். சட்ட ரீதியாக இதை தடுக்க முடியாது. அப்படி செய்தால் குறிப்பிட்ட ரூட் மற்றும் பெர்மிட் கொடுக்க வேண்டும். அதற்கு சட்டத்தில் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இருமடங்கு கட்டணம்
 தனியார் பஸ்களில், ரூ.700 - 1,700 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது தீபாவளி  பண்டிகையை காரணம் காட்டி, வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து கூடுதலாக  ரூ.500 - ரூ.1,200 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மதுரைக்கு  ரூ.1100ல் இருந்து ரூ.2700 மற்றும் ரூ.3000 வரை வசூலிக்கப்படுகிறது. அதில்,  குளிர்சாதன வசதி பேருந்துக்குத்தான் அதிகமாக ரூ.3000 ஆயிரம் வரை  வசூலிக்கப்
படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Diwali festival, Omni bus, charge robbery
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...