×

மகா புஷ்கரம் நினைவாக தாமிரபரணி தண்ணீர் தபால் நிலையங்களில் விற்பனை : பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நெல்லை: தாமிரபரணி மகா புஷ்கரம் நிறைவு பெற்ற நிலையில், தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனை போன்று தாமிரபரணி தண்ணீர் விற்பனையை நாடு முழுவதும் தொடங்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பொதிகை மலையில் உற்பத்தியாகி புன்னக்காயலில் கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு பின்னர் மகா புஷ்கர விழா தற்போது நடந்து முடிந்துள்ளது. இவ்விழாவை ஒட்டி ஒவ்வொரு நாளும் ஆற்றில் லட்சக்கணக்கான மக்கள் நீராடினர். பாபநாசம், அம்பை, சேரன்மகாதேவி, திருவிடைமருதூர், நெல்லை கைலாசபுரம், குறுக்குத்துறை, அருகன்குளம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம் என அனைத்து தீர்த்த கட்டத்திலும் மக்கள் அலை அலையாய் திரண்டு நீராடினர்.

சில தீர்த்தக்கட்டங்களில் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேலாக கூட்டத்தை பார்க்க முடிந்தது. 12 நாட்களும் சுமார் 60 லட்சம் பேர் நீராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துறவியர்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் என தாமிரபரணியில் நீராட வந்த பிரபலங்களும் அதிகம். ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியாவில் மட்டுமல்ல, வட இந்திய மக்களும் புனித நீராட்டத்தில் பங்கெடுத்தனர். இச்சூழலில் தாமிரபரணியில் நீராட முடியாத பக்தர்களுக்காக அதன் தண்ணீரை நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. தபால் நிலையங்கள் மூலம் கங்கை புனித நீர் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. வாழ்நாளில் ஒருமுறையாவது கங்கையில் நீராட வேண்டும் என நினைப்பவர்கள் ஏராளம்.

பல்வேறு சமய சடங்குகளிலும் கங்கை நீர் புனிதமாக கருதப்படுகிறது. கங்கை நீரை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ‘கங்கா ஜல்’ என்னும் திட்டத்தினை இந்திய தபால் துறை ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டில் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ரிஷி கேசில் இருந்து கங்கை நீர் பெறப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்டு அனைத்து முக்கிய தபால் நிலையங்களிலும் விற்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கங்கை நீர் பாளை, ஸ்ரீபுரம், அம்பை உள்ளிட்ட தலைமை தபால் நிலையங்களில் விற்கப்பட்டு வருகிறது. 200 மி.லி கொண்ட ஒரு பாட்டில் விலை ரூ.15க்கும், 500 மிலி கொண்ட ஒரு பாட்டில் ரூ.22க்கும் விற்கப்படுகிறது.

மகா புஷ்கர விழாவை ஒட்டி தாமிரபரணி தண்ணீரையும் இதுபோல் பாட்டில்களில் அடைத்து நாடு முழுவதும் தபால் நிலையங்களில் விற்பனை செய்தால், விழாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் பயன்பெறுவர். தபால் நிலையத்தை பொறுத்தவரை ஏற்கனவே சோலார் விளக்குகள், தீபாவளி பட்டாசுகள், தங்க நாணயங்கள், சிறிய பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடைமுறையில் இருந்தன. தாமிரபரணி தண்ணீரையும் புனிதம் கருதி நாடு முழுவதும் கிடைத்திட தபால் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நெல்லை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சாந்தகுமார் கூறுகையில், ‘‘தபால் நிலையங்களில் ஏற்கனவே கங்கை ஆற்றின் புனித நீர் விற்பனையில் உள்ளது. தீபாவளி நேரங்களில் அதை வாங்கிச் செல்வோர் அதிகம். தாமிரபரணி தண்ணீர் விற்பனை குறித்து எங்களுக்கு பக்தர்கள் சார்பில் கோரிக்கை வந்தால் அதை மேலிட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம். அவர்கள் முடிவுக்கேற்ப தபால்துறை செயல்படும்’’ என்றார்.

12 நதிகளின் நீரும் விற்பனை தபால்துறைக்கு லாபம் தரும்

புஷ்கர விழாவின் பலன்கள் குறிப்பிட்ட 12 நாட்கள் மட்டுமே கிடைப்பதல்ல. குரு பகவான் ஒரு ராசியில், அதற்குரிய நதியில் சஞ்சாரம் செய்யும் ஓராண்டு முழுவதும் புஷ்கர விழா கொண்டாடக் கூடியதாகும். குருபகவான் மேஷத்தில் இருக்கும் போது கங்கா புஷ்கரம், ரிஷபத்திற்கு நர்மதா, மிதுனத்திற்கு சரஸ்வதி, கடகத்திற்கு யமுனா, சிம்மத்திற்கு கோதாவரி, கன்னிக்கு கிருஷ்ணா, துலாம் ராசிக்கு காவேரி, விருச்சிகத்திற்கு தாமிரபரணி மற்றும் பீமா, தனுசு ராசிக்கு தப்தி மற்றும் பிரம்மபுத்ரா, மகரத்திற்கு துங்கபத்ரா, கும்பத்திற்கு சிந்து நதி, மீன ராசிக்கு பிரன்ஹிதா நதிகளில் புஷ்கர விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புஷ்கர விழா நடைபெறும் நதிகளின் புனித நீரை தபால்துறை மூலம் விற்பனை செய்தால் அந்த நதிகளுக்கு நீராடச் செல்ல முடியாதவர்கள் பயன்பெறலாம். இதன்மூலம் தபால்துறைக்கும் நிறைய வருவாய் கிடைக்கும் என்பதால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தபால்துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamaraparani ,Maha Pushkaram: Public , Maha Pushkaram, Thamiraparani, Water
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்த திடீர்...