×

காவிரியில் வெள்ளப்பெருக்கெடுத்தும் திருவெறும்பூரில் நிரம்பாத குளங்கள்

திருவெறும்பூர்: கடந்த ஜூலை 19ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இரு முறை காவிரியில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. தமிழக அரசு ஏரி, குளம், வாய்க்கால்களை சரியாக தூர் வாராததால் ஏராளமான தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. மாயனூரில் இருந்து உய்யகொண்டான் வாய்க்காலில் பிரிந்து வரும் தண்ணீர் மூலம் தான் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பும். அந்த தண்ணீரை வைத்து சம்பா சாகுபடி செய்வது வழக்கம். திருவெறும்பூர் அடுத்த பத்தாளப்பேட்டை ஊராட்சி பகுதியில்  500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கீழக்குளம், மேலக்குளம், கெட்டிகுளம், தட்டான் குளம் என 4 குளங்கள் மூலம்தான் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

குளங்களில் மேட்டூர் அணையில் 40 முதல் 50 அடி தண்ணீர் உள்ள காலங்களிலேயே தண்ணீர் நிரம்பும். அதை வைத்து விவசாயம் செய்து வந்தனர். பொதுப்பணித்துறையின் நிர்வாக சீர்கேட்டாலும், அலட்சியத்தாலும் பத்தாளப்பேட்டையில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை. கீழக்குளம், மேலக்குளம் மூலம் 350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. போதிய தண்ணீர் இல்லாததால் விவசாய பணியை தொடங்க முடியவில்லை. புழுதி உழவாவது ஓட்டலாம் என்றால் அதற்கும் போதிய ஈரம் இல்லை. அதனால் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக விவசாய நிலங்கள் மாறிவிட்டன. சில இடங்களில் நாற்று விட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் இல்லாததால் நடவு பணி தொடங்க முடியவில்லை.

இதுகுறித்து பத்தாளப்பேட்டை விவசாயிகள், திருச்சி கலெக்டர் ராஜாமணியிடம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் உடனடியாக கலெக்டர் ராஜாமணியும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அந்தப் பகுதிக்கு தேவையான தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உய்யகொண்டான் ஆற்றில் முறைவைத்து தண்ணீர் திறக்க தொடங்கி விட்டனர்.

முறையாக குளங்களில் தண்ணீர் இருந்திருந்தால் தற்போது நடவு செய்து அந்த பயிர்களை பறிக்கும் அளவிற்கு வந்திருக்கும். ஆனால் இன்னும் நடவு பணியை கூட தொடக்க முடியவில்லை. கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டால் அவர்கள் தண்ணீர் இல்லாமல் உங்களுக்கு கடன் தரமுடியாது என மறுக்கின்றனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் பத்தாளப்பேட்டையில் உள்ள கீழக்குளம் மற்றும் மேலக்குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு கலெக்டர் உத்தரவு படி நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக பத்தளாப்பேட்டை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kaveri , Cauvery, Tiruverambur, pools
× RELATED எக்மோ சிபிஆர் புதிய திட்டம்...