×

ரணில் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை சபாநாயகருடன் அதிபர் சிறிசேனா சந்திப்பு: சமரச முயற்சியால் பரபரப்பு

கொழும்பு: பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசி–்ங்கே நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ஜெயசூர்யாவை  அதிபர் சிறிசேனா நேற்று திடீரென சந்தித்து பேசினார். இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா கடந்த வாரம் திடீரென நீக்்கிவிட்டு, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். நாடாளுமன்றத்தையும் வரும் 16ம் தேதி வரை முடக்கினார். இதனால், இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ரணிலின் பதவி பறிக்கப்பட்டதற்கு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் வரையில் அவர்தான் பிரதமர் என்றும் அறிவித்தார். அவருடைய எதிர்ப்பையும் மீறி பிரதமராக ராஜபக்சே பதவியேற்றார். ஆனால், பிரதமரின் அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேற மறுத்து ரணில் அங்கேயே இருந்து வருகிறார்.

அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வீரர்கள் மற்றும் கார்களை திரும்ப பெற அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். நேற்று அவரது வீட்டில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து அட்டர்னி ஜெனரலிடம் சபாநாயகர் ஜெயசூர்யா கருத்து கேட்டுள்ளார். 5 கேள்விகளுக்கான பதிலை தரும்படி அவர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அவருடைய கேள்விகள் பற்றி கருத்து கூற அட்டர்னி ஜெனரல் மறுத்து விட்டார். அதேபோல், அதிபர் சிறிசேனாவுக்கும் சபாநாயகர் கடிதம் எழுதினார். அதில், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டும்படி வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், சபாநாயகரை அதிபர் சிறிசேனா நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினார். ரணிலின் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எல்லாரையும் சிறிசேனா சரிக்கட்ட முயற்சி செய்து வருவது, இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sirisena ,Speaker ,Sri Lankan ,Ranil , President Sirisena meets with Sri Lanka Speaker
× RELATED கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்...