×

சமயபுரம் கோவிலில் பாகனை கொன்ற யானை மசினியை மீண்டும் முதுமலை அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருச்சியில் பாகனை கொன்ற யானையை மீண்டும் முதுமலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மசினி யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அனுப்ப உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. 2008ம் ஆண்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் பிறந்தநாள் பரிசாக மசினி யானை வழங்கப்பட்டது.  இதனை தொடர்ந்து 10 ஆண்டுகளாக பாகன் கஜேந்திரன் என்பவர் இந்த யானையை பராமரித்து வந்தார். கடந்த மே மாதம் மசினி யானைக்கு மதம் பிடித்ததில் பாகன் கஜேந்திரனை ஆத்திரத்தில் தள்ளி விட்டது. அவர் மீண்டும் எழுந்து வந்து அங்குசத்தால் அதன் காலில் குத்திய போது, அவரை துதிக்கையால் காலுக்குள் இழுத்து நெஞ்சில் காலால் மிதித்துக் கொன்றது.

மேலும் 8 பக்தர்களுக்கு மேல் காயம் அடைத்தனர். இதையடுத்து அந்த  யானை தஞ்சை ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் பராமரிக்கப்பட்டு, அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த கிளைமண்ட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் காடுகளில் திரிந்து வந்த மசினி யானையை வளர்ப்பதற்கு கோவில் சரியான இடமில்லை என்றும், எனவே மசினி யானையை மீண்டும் யானைகள் காப்பகத்திற்கே அனுப்ப வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஒரத்தநாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரியில் உள்ள மருத்துவர்கள் மசினி யானையின் நிலை குறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மசினி யானை நல்ல நிலையில் இருப்பதாகவும், எனவே அதனை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம் மசினி யானையை முதுமலை யானைகள் முகாமிற்கு அனுப்ப உத்தரவிட்டது. மேலும் முதுமலைக்கு மாற்றம் செய்யப்பட்ட பின்னர் அதன் நிலை குறித்து முழு அறிக்கையை வருகிற டிசம்பர் மாதம் 22ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,pagans , Samayapuram,Masini Elephant,Mudumalai,HC
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...