×

கடந்தாண்டு நடந்த எஸ்.எஸ்.சி தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் ஆதரவு

புதுடெல்லி: கடந்தாண்டு நடத்தப்பட்ட ஸ்டாப் செலக்‌ஷன்(எஸ்.எஸ்.சி) தேர்வை ரத்து செய்யவும், மாணவர் நலன் கருதி மீண்டும் தேர்வு நடத்தவும் உச்ச நீதிமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்தாண்டு ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் பட்டதாரிகள் அளவிலான தேர்வு மற்றும் பிளஸ் 2 அளவிலான போட்டி தேர்வுகளை நடத்தியது. இவற்றில் பட்டதாரிகள் தேர்வுகளின் ஒரு வினாத்தாள் கசிந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வெழுதியவர்கள் நாடு முழுவதும் பல நாள் போராட்டம் நடத்தினர். கேள்வித்தாள் வெளியானது குறித்து சிபிஐ விசாரணை நடத்த எஸ்எஸ்சி பரிந்துரை செய்தது. இந்த தேர்வின் முடிவை வெளியிடவும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி தடை விதித்தது.

சிபிஐயின் விசாரணை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாப்டே, நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தேர்வெழுதியவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண், ‘‘இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வு நடத்தும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்காமல், அரசு அமைப்பே தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார். மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடந்த ஒரு தேர்வில் மட்டும்தான் தொழில்நுட்ப கோளாறால் பிரச்னை. கேள்விதாள் கசிவு குற்றச்சாட்டு பொதுப்படையானது. இதற்காக ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வது நல்லதல்ல’’ என்றார்.

இதன்பின் நீதிபதிகள் கூறுகையில், ‘‘சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை மத்திய அரசுக்கு வழங்கப்படும். அதைப் பார்த்தபின் உங்கள் பதிலை தெரிவியுங்கள். இந்த வழக்கு நவம்பர் 13ம் தேதி விசாரிக்கப்படும். இந்த தேர்வை பலர் கஷ்டப்பட்டு படித்து எழுதியுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் கேள்வித்தாள் கசிவால் பயன் அடைபவர்களை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. தேர்வு முறைகேட்டால், பயனடைந்தவர்கள் யார் என்பதை தீர்மானிப்பது கஷ்டமாக உள்ளது. அதனால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட முடியும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,examination ,SSC , Supreme Court , SSC examination
× RELATED தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது;...