×

இலங்கை அரசியலில் பரபரப்பு...... ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக அங்கீகரித்தார் சபாநாயகர் கரு ஜெயசூரியா

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கியுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கேவை அந்நாட்டின் பிரதமராக நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அங்கீகரித்துள்ளார். இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.  இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என  விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டால் அங்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர விக்கிரமசிங்கே திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், நவ. 16-ம் தேதிவரை நாடாளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நேற்று உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் அரசு கார் திரும்பப்பெறப்பட்டது. இப்படி பரபரப்பாக சென்றிக்கொண்டிருக்கும் இலங்கை அரசியல் நிகழ்வுகளில் தற்போது உச்சகட்ட திருப்பமாக ரணில் விக்ரமசிங்கேவை அந்நாட்டின் பிரதமராக நீடிப்பார் என்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அங்கீகரித்துள்ளார். அவருக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதிவரை முடக்கி வைத்துள்ள அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றையும் சபாநாயகர் அனுப்பி வைத்துள்ளார். நாடாளுமன்ற முடக்கம் நாட்டில் மிக தீவிரமான, விரும்பத்தகாத எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என தனது கடிதத்தில் அவர் எச்சரித்துள்ளார். சபாநாயகருடன் ஆலோசித்த பின்னரே நாடாளுமன்றத்தை கூட்டவும், முட்டகவும் வேண்டும். எனவே, உங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மைத்ரிபாலா சிறிசேனாவை அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கேவின் சிறப்பு உரிமைகள் தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் இந்த நடவடிக்கையால் இலங்கை அரசியலில் தற்போது உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karu Jayasuriya ,Ranil Wickramasinghe , Speaker Karu Jayasuriya, Ranil Wickramasinghe, President Sirisena, Sri Lanka
× RELATED இலங்கையில் செப். 17 முதல் அக்.16ம் தேதிக்குள் அதிபர் தேர்தல்