×

இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் சண்டையால் அதிமுக என்ற எக்கு கோட்டையில் சிதைவு: திவாகரன் கருத்து

மன்னார்குடி: தற்போது வந்துள்ள தீர்ப்பின் மூலம் இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் இடையிலான குடுமிடிப்பிடி சண்டை காரணமாக அதிமுக என்ற எக்கு கோட்டையில் சிதைவு ஏற்பட்டுள்ளது’ என்று திவாகரன் கருத்து  தெரிவித்தார்.அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று அளித்த பேட்டி: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேர் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் மீது ஒரு  நடவடிக்கையும் இல்லை. இன்று வரை பதவியை அனுபவித்து வருகின்றனர். ஆனால், முதல்வரை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு அளித்த 18 பேர்களுக்கு மட்டும் தண்டனை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னரிடம் மனு  அளித்தது தவறு இல்லை. சபாநாயகர் ஒரு தலைபட்சமாக நடந்துள்ளார்.

 ஜெயலலிதாவின் உழைப்பின் காரணமாகவே இரு அணிகளில் உள்ள எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். இதனை அனைவரும் மறந்துவிட்டது நன்றி கெட்ட செயலாகும். 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றால் அதில்  எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியினர் வெற்றி பெறுவது கேள்விக்குறியே. எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் தினகரன் இடையே நடந்த குடுமிப்பிடி சண்டையின் காரணமாக இத்தீர்ப்பின் மூலம்  அதிமுக என்கிற எக்கு கோட்டையில்  சிதைவு ஏற்பட்டுள்ளது.

 ஏற்கனவே அமைச்சர்கள் வரம்பு மீறி செயல்பட்டதில் மக்கள் மத்தியில் கட்சிக்கும் ஆட்சிக்கும்  மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது வந்துள்ள தீர்ப்பு அரசுக்கு ஊதப்பட்ட சங்கு.
இந்த சுழலில் ஒன்று சட்டசபையை கலைக்கப்பட வேண்டும் அல்லது உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும். 18 எம்எல்ஏக்களும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுக்கு செல்லக் கூடாது. தேர்தலுக்கு தயாராகி மக்களை  சந்திக்க வேண்டும். ஏனெனில் மக்கள் தீர்ப்பே இறுதியானது. இவ்வாறு  திவாகரன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fight ,OBS ,Dinakaran , EPS, OPS, Dinakaran
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...