×

தடா, பொடா, மிசாவையே பார்த்துவிட்டோம் பழிவாங்கும் நோக்கில் போடப்படும் அவதூறு வழக்குகளை சந்திக்க தயார்: நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: பொடா, தடா, மிசாவை பார்த்தவர்கள் நாங்கள். பழிவாங்கும் நோக்கில் புனையப்படும் அவதூறு வழக்குகளை சந்திக்கத் தயாராக  இருக்கிறோம் என அவதூறு வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரான மு.க.ஸ்டாலின் கூறினார். எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற  வழக்குகளை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தில் சிறப்பு நீதிமன்றம்  திறக்கப்பட்டது. அதில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் மீது தொடரப்பட்ட 7 அவதூறு வழக்குகளுக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்டாலின் நீதிமன்றத்தில் 2 வாரத்துக்குள்  நேரில் ஆஜராகி 5000 ரூபாய்க்கான  உத்திரவாதம் வழங்கினால் வழக்கிற்கு தடை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, ஸ்டாலின் நேற்று காலை வழக்கு விசாரணைக்காக  நீதிமன்றத்தில் ஆஜராகினார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவை  ஏற்றுக்கொள்வதாக கூறி, இனி வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டு, வழக்கை வரும் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
 
அப்போது ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி எம்.பி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, பொன்முடி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்  வந்திருந்தனர். மேலும் நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் தொண்டர்களும் குவிந்திருந்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: அதிமுக  ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், அவருடைய மறைவுக்குப் பிறகு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் என் மீது  7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வழக்காக என் மீது ஒரு வழக்கைப் போட்டார். என்  மீதும், என்னுடைய குடும்பத்தினர் மீதும் ஒரு தவறான அடிப்படையில் ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார்கள்.

அது நியாயமான குற்றச்சாட்டு அல்ல, பொய்க் குற்றச்சாட்டு என்பதை உணர்ந்து நானே நேரடியாக டி.ஜி.பி அலுவலகத்திற்கு சென்று என் மீது  போடப்பட்டிருக்கக்கூடிய வழக்கு ஒரு பொய் வழக்கு என்றேன். 2வதாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்த காரணத்தால் சென்னை மாநகரம், காஞ்சிபுரம்,  திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் இறந்து போயிருக்கிறார்கள். அந்த வெள்ளத்தில் சிக்கி பல வீடுகள் பறிபோயிருக்கிறது.  ஆகவே, இதற்கு காரணம் அ.தி.மு.க ஆட்சிதான் என்று தெளிவாக எடுத்துச் சொன்னேன். அதற்கு என் மீது வழக்கு போடப்பட்டது.

வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், அதை முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லவில்லை. அதனால்தான் இந்த ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று  சொல்லியிருக்கிறார். அந்த அடிப்படையில் என்மீது ஒரு மான நஷ்ட வழக்கு போடப்பட்டிருக்கிறது. சென்னையிலே காலரா நோய் பரவிய நேரத்தில்,  முதல்வர் ஜெயலலிதா வெகேஷன் டூர் போயிருக்கிறார் என்று நான் பேசிய பேச்சுக்கு ஒரு மான நஷ்ட வழக்கு.4வதாக முதல்வர் ஜெயலலிதா  சென்னை கோட்டையில் இருப்பதை விட கோடநாட்டில் தான் அதிகம் தங்கி இருக்கிறார், என்று நான் பேசிய பேச்சுக்காக ஒரு மான நஷ்ட வழக்கு.

5வதாக, சட்டமன்றத்தில் மேட்டூர் அணை நிலவரத்தைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி  பழனிசாமி விளக்கம் சொல்லுகிற போது, மில்லியன் கன அடி என்று சொல்ல வேண்டும். அதற்குப் பதில் தவறுதலாக கன அடி என்று சொல்லி  விட்டார், இதைப்பற்றி பேச வாய்ப்பை மறுத்தார்கள். அதனால், வெளியிலே வந்து இதுபற்றி நான் சொன்னேன். அதற்காக ஒரு மான நஷ்ட வழக்கு.
அடுத்து, 6வதாக திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பேசுகிற போது மத்திய அரசிடம் மாநில அரசு பல்கலைக்கழக விவகாரங்களைக் கூட அடமானம்  வைக்கக்கூடிய சூழ்நிலையில் எடுபிடியாக எடப்பாடி தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னேன். அதற்கு ஒரு மான நஷ்ட  வழக்கு.

மானம் போயிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அரசு இது. எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது அது அவருடைய மானம். அடுத்து குட்கா புகழ் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் பல அமைச்சர்கள் மீதும்  பல அதிகாரிகள் மீதும், பல வழக்குகள் புனையப்பட்டு சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் எங்கள் மீது போடப்பட்டிருக்கக்கூடிய இந்த  மான நஷ்ட வழக்கை எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தடா, பொடா, மிசாவை பார்த்தவர்கள், அவர்களுடைய அம்மா ஜெயலலிதா போட்ட வழக்குகளை சந்தித்தவர்கள் நாங்கள். எனவே, இதுபோன்ற மான  நஷ்ட வழக்குகளை சந்திப்பதற்கு நான் மட்டுமல்ல, திமுகவில் இருக்கும் முன்னணித் தலைவர்களாக இருந்தாலும், செயல் வீரர்களாக இருந்தாலும்,  தொண்டர்களாக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

படுகர்கள் சந்திப்பு
நீலகிரி மாவட்ட படுகர்கள் சுமார் 100 பேர் ஜார்ஜ் தலைமையில் நேற்று பாரம்பரிய உடை அணிந்து இசைக்குழுவினருடன் நடனமாடியபடி நேற்று  அண்ணா அறிவாலயம் வந்தனர். பின்னர் அவர்கள் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.  முன்னதாக அவர்கள் கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்கள். அப்போது ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், திராவிட  மணி எம்.எல்.ஏ., எமரால்டு சேகர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : POTA ,TADA ,court ,revenge ,MISA ,MK Stalin , MK Stalin
× RELATED பாஜவில் இருந்து விலகி அதிமுகவில்...