×

சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் உட்பட 7 பேர் பலி சுகாதாரத்தை காப்பதில் சுகாதாரத்துறை அவுட்

* பெயருக்கு ஆய்வு, விழிப்புணர்வு கூட்டம்  
* நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையில் அலட்சியம்
* திரும்பிய பக்கமெல்லாம் குப்பை குவியல், கழிவுநீர் தேக்கம்
* மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்


திருவொற்றியூர்: வடசென்னை பகுதியில் வேகமாக பரவும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சுகாதாரத்தை பேணி காப்பத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தோல்வியடைந்து விட்டனர். பெயருக்கு ஆய்வு, விழிப்புணர்வு கூட்டத்தை அதிகாரிகள் நடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு சாட்டி உள்ளனர். பருவமழை மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இதனால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நோய் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் வரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சென்னையில், கடந்த வாரங்களில் புளியந்தோப்பை சேர்ந்த அஸ்லாம், பெரம்பூரை சேர்ந்த ரிஸ்வான், மணலியை சேர்ந்த கவியரசன் ஆகியோரும், நேற்று முன்தினம் மாதவரம் தணிகாசலம் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகளான தக்‌ஷன், தீக்‌ஷா ஆகியோரும், தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் உதயசேகர் என்பவரும், நேற்று எண்ணூர் சத்தியவாணி முத்து நகரை சேர்ந்த சபிக் என்ற சிறுவனும் என 7 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தொடர்ந்து டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், துரிதமாக செயல்பட்டு நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தோல்வியடைந்து விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
குறிப்பாக, வடசென்னை பகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் அண்ணாமலை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜா சண்முகம் நகர், கலைஞர் நகர், ராமசாமி நகர், எர்ணாவூர் மாகாளியம்மன் கோயில் தெரு, பிருந்தாவன் நகர், மணலி ராஜா பாதர் தெரு, சாலைமா நகர் அம்பேத்கர் நகர், மாதவரம் தணிகாசலம் நகர், பொன்னியம்மன்மேடு, பெரம்பூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, எண்ணூர் ஆகிய பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

இங்குள்ள திறந்தநிலை மழைநீர் கால்வாய்களில் குப்பை தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகள் நகராட்சியாக இருந்தபோது, கால்வாய்களை அவ்வப்போது துப்புரவு ஊழியர்கள் தூர்வாரி சீரமைத்தனர். ஆனால் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் இவற்றை முறையாக பராமரிப்பதில்லை. இதனால், கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மழை பெய்த சிறிய மழைக்கே கால்வாய்களில் மழைநீர் சீராக செல்ல முடியாமல் தெருக்களில் வழிந்தோடியது. பல இடங்களில் பைப்லைன் உடைந்துள்ளதால் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதை பருகும் மக்களுக்கு சமீபகாலமாக தொற்றுநோய் பரவி வருகிறது. பல இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. குப்பைகளை சரிவர அகற்றாததால் ஆங்காங்கே குவியலாக காட்சியளிக்கிறது. பருவ மழை தொடங்கும் முன்பே சுகாதார பணிகளை முறையாக மேற்கொண்டு இருந்தால், இப்போது இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

தற்போது, டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவுவதற்கும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம், என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஆண்டுதோறும் பருவமழை தொடங்குவதற்கு முன்பு டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை முன்கூட்டியே தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. பாதிப்பு வந்தபின்புதான் அவசர, அவசரமாக தெருக்களை சுத்தம் செய்வதும், கழிவு நீரை அப்புறப்படுத்துவதுமாக உள்ளனர். சாதாரண நாட்களில் கொசு மருந்து அடிப்பதில்லை. பிளீச்சிங் பவுடர் தெளிப்பதில்லை. கழிவுநீர், குப்பைகள் குறித்து புகார் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தொற்றுநோய் ஏற்படுகிறது.

தற்போது, டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணி என்று ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. அவர்கள் பெயருக்கு ஆய்வு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடத்துகின்றனர். ஆனால், டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட மர்ம காய்ச்சலை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கழிவுநீர் மற்றும் குப்பைகள் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி கொசுகடியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனதால், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சைக்காக குவிந்துள்ளனர். எனவே, அதிகாரிகள் உடனுக்குடன் சுகாதார பணிகளை மேற்கொண்டு நோய் பராமல் தடுத்து உயிரிழப்பை தடுக்க வேண்டும்’’ என்றனர்.

கொசு உற்பத்தி மையம்
தெருக்கள் மற்றும் வீடுகளில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள தேங்காய் மட்டை, டயர்களில் கொசு உற்பத்தியாவதாகவும், இதனை முறையாக அகற்ற வேண்டும், எனவும் மாநகராட்சி விழிப்புணர்வு செய்கிறது. ஆனால், சாலையோரங்களில் உள்ள இளநீர் கடைகளின் அருகில் இளநீர் மட்டை குவியலாக காட்சியளிக்கிறது.

ஊழியர்கள் பற்றாக்குறை
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான மண்டலங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் குப்பைகளை அள்ள குறைந்த அளவிலேயே ஊழியர்கள் உள்ளனர். மேலும், குப்பை அள்ளும் மூன்று சக்கர சைக்கிள், லாரிகள் பழுதாகி கிடக்கிறது. அதனை சரிசெய்ய நிர்வாகம் முயற்சிக்கவில்லை. புதிய சைக்கிளும் தருவது இல்லை. ஓய்வு, இறப்பு, காலி பணி இடங்களை நிரப்பாமல் உள்ளனர்.

பல லட்சம் முறைகேடு
மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டுகளிலும் தெருக்களை சுத்தம் செய்து, குப்பைகளை அப்புறப்படுத்தி வந்த துப்புரவு ஊழியர்களை தற்போது அதிகாரிகள் அதிகளவில் குறைத்து விட்டனர். ஆனால், ஊழியர்கள் வேலை செய்வதாக போலி பில் தயாரித்து பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கழிவுநீர் குட்டையான ஏரி
மணலி மாத்தூர் ஏரியை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீரை ஏரியில் விடுகின்றனர். இதனால் ஏரி நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு உற்பத்தியாகி எம்.எம்.டி.ஏ., மணலி போன்ற பகுதி மக்கள் தோற்று நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே மணலி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும். மணலி சிபிசிஎல் நிறுவனம் அருகே சாலையோரம் நாள்கணக்கில் தேங்கும் மழைநீரை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரமற்ற கொசு மருந்து
சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் கொசு ஒழிப்பு பிரிவு உள்ளது. இந்த பிரிவுக்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊழியர்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் தினமும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. ஆனால் இந்த கொசு மருந்துகள் தரமாக இல்லாததால், கொசுக்களை ஒழிக்க முடிவதில்லை. ஆனால், கொசு மருந்து அடித்ததாக மாதம்தோறும் பெரிய தொகையை அதிகாரிகள் அபேஸ் செய்கின்றனர்.

குரோம்பேட்டை பகுதியில் கழிவுநீரில் மொய்க்கும் கொசுக்கள்
குரோம்பேட்டை பகுதியில் உள்ள ஜமீன் ராயப்பேட்டை, போஸ்டல் நகர், குளக்கரை தெரு ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் இருந்து பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக பல்லாவரம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், பள்ளிகள் என சென்று வரும் பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் குளக்கரை தெரு வழியாகத்தான் சென்று வருகின்றனர். மேலும், இந்த தெருவில் ரேஷன் கடை உள்ளது. இதனால் தினமும் அந்த தெருவில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இவ்வாறு எப்போதும் பொதுமக்கள் வந்து செல்லும் இந்த தெருவில் பல நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளதால், பொதுமக்கள் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘ இப்பகுதியில் சாலை, கால்வாய், குப்பை தொட்டிகள் என எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் பல்லாவரம் நகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால், அனைவரும் குப்பைகளை சாலை ஓரமாகவே கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், இங்கு துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாகி உள்ளது’’.

அம்பத்தூர் பகுதியில் குப்பை குவியல்
அம்பத்தூர் மண்டலத்தில் அம்பத்தூர், அத்திப்பட்டு, கள்ளிக்குப்பம், புதூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மண்ணூர்பேட்டை, மங்களபுரம், பட்டரைவாக்கம், பாடி, கொரட்டூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 15 வார்டுகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அம்பத்தூர் மண்டலத்தில் குப்பைகள் சரி வர அள்ளப்படாததால் முக்கிய சாலைகள், தெருக்களில் ஆங்காங்கே குவிந்துகிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அம்பத்தூர் மண்டலத்தில் பல இடங்களில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்ட தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து வழிகின்றன.

இந்த குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களும் இடையூறு ஏற்படுகின்றன. இவ்வாறு தேங்கி கிடக்கும் குப்பைகளால் தூர்நாற்றம் வீசுகிறது. இதில் இருந்து லட்சக்கணக்கான கொசுக்கள் ஊற்பத்தியாகின்றன. இந்த கொசுக்கள் கடித்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai,dengue, twin babies, killed, Health Care
× RELATED இன்று காலை 11 மணி முதல் 3 வரை...