×

சபரிமலை தீர்ப்புக்கு எதிரான 19 சீராய்வு மனுக்கள் நவ.13ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 19 சீராய்வு மனுக்களையும் நவம்பர்  13ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதுடன், ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்களையும் தடுத்து நிறுத்தி  வருகின்றனர்.இந்த நிலையில் சபரிமலை தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சீராய்வு மனுக்களை அவசர வழக்காக  விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பரா நேற்று முன்தினம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சபரிமலை  வழக்கு விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரிப்பது குறித்து செவ்வாய்க்கிழமை (நேற்று) உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக தாக்கல்  செய்யப்பட்டுள்ள அனைத்து சீராய்வு மனுக்களும் நவம்பர் 13ம் தேதி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்’’ என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சபரிமலை தீர்ப்பு தொடர்பாக 19  சீராய்வு மனு மற்றும் இரண்டு ரிட் மனு ஆகியவை அனைத்தும் ஒன்றாக இணைத்து அன்றைய தினம் விசாரணைக்கு வரவுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prosecutions ,Sabarimala , Against,Sabarimala judgment, Investigation,Nov. 13, Supreme Court Notice
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...