×

பைக் ரேஸ் முன்விரோதம் உயிரை பறித்தது சாந்தோம் திருமண மண்டபத்தில் ரவுடி படுகொலை: கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: பைக் ரேஸ் ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறில் ரவுடி ஓட ஓட விரட்டி உருட்டு கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 4 பேர் போலீசில் பரபரப்பு  வாக்குமூலம் அளித்துள்ளனர்.சென்னை மயிலாப்பூர் நொச்சிநகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பி பிளாக்கை சேர்ந்தவர் லட்சுமி (48). இவரது மகன் விஜய் (எ) ரைடர் விஜய் (25). நொச்சி நகரில் ரவுடியாக வலம் வந்த இவர் மீது  அடிதடி உள்ளிட்ட வழக்குகள் மயிலாப்பூர் மற்றும் மெரினா காவல் நிலையங்களில் உள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று  முன்தினம் சாந்தோம் சர்ச் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அதில், விஜய் (எ) ரைடர் விஜய் தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். மது போதையில் இருந்த விஜய் மண்டபத்தில்  நடந்த இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது அடிக்கடி இடையில் ஸ்பிரே அடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.ஸ்பிரே அடிக்கும் போது நொச்சிநகரை சேர்ந்த உலகநாதன் (26) என்பவர் மீது ஸ்பிரேயின் நுரை பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விஜய்க்கும் உலகநாதனுக்கும் இடையே தகராறு  ஏற்பட்டு ஒருவரை ஒருவர் திருமண மண்டபத்திலேயே அடித்து கொண்டதாக கூறப்படுகிறது. இருவரையும் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.பின்னர் விஜய் மண்டபத்தை விட்டு வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து விஜய் கத்தியுடன் உலகநாதனை வெட்ட திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார். அப்போது, மண்டபத்தின் எதிரே  உலகநாதன் தரப்பினர் வைத்த பேனரை விஜய் கிழித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதை பார்த்த உலக நாதன் தரப்பினர் விஜயிடம் கேட்ட போது, தான் கொண்டு வந்த கத்தியால் உலகநாதன்  தரப்பினரை வெட்ட பாய்ந்துள்ளார். உடனே உலகநாதன் தரப்பை சேர்ந்த மணிகண்டன் (25), அசோக் (22), ஜெயகுமார்(28) ஆகியோர் மண்டபத்தில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து விஜயை  சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதில் வலி தாங்க முடியாமல் விஜய் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவர்கள் விடாமல் ஓட ஓட துரத்தி சென்று சிறிது தொலைவில் மடக்கி அடித்து உதைத்தனர். இதில் விஜய்க்கு தலை மற்றும் உடல்  முழுவதும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் உயிரிழந்த செய்தி கேட்டு தாய் லட்சுமி ஓடிவந்து தனது மகன் உடலை கட்டியணைத்து அழுத சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்ேபட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். பின்னர், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் நொச்சி நகருக்குள் சென்று வீடு வீடாக சோதனை நடத்தி உலகநாதன் தரப்பை சேர்ந்த மணிகண்டன், அசோக், ஜெயகுமார் ஆகிய  4 பேரையும் இரவோடு இரவாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 வாலிபர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:

நொச்சிநகரில் விஜய் வைப்பது தான் சட்டமாக இருந்தது. விஜய் ஒவ்வொரு வாரமும் மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபடுவது வழக்கம். இதனால் தனது பெயருக்கு முன்பு ரைடர்  விஜய் என்று மாற்றி கொண்டார். அதேபோல் நாங்கள் பைக் ரேசில் ஈடுபட்டால் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கொடுத்து எங்களை போலீசில் சிக்க வைத்து விடுவான். இதனால் எங்களுக்குள் பல  முறை தகராறு ஏற்பட்டு வந்தது. நொச்சிநகரில் பைக் ரேசில் தான் தான் மாஸ் என்று கூறி யாரையும் பைக் ரேசில் ஈடுபடாமல் தடுத்து வந்தான். இதனால் நாங்கள் விஜயை கொலை செய்ய பல முறை  முயற்சி செய்தோம். ஆனால் எங்களால் அவனை தீர்த்து கட்ட முடியவில்லை. திருமண மண்டபத்தில் எங்களிடம் மது போதையில் விஜய் ஸ்பிரே அடித்து தகராறில் ஈடுபட்டு, எங்களை வெட்ட  கத்தியுடன் வந்ததால் எங்களை விஜய் கொலை செய்வதற்குள் நாங்கள் அவனை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்தோம்.  இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார்  தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : assassination ,Rudy ,wedding ceremony ,Santhom ,Bike arrest , The bike race,predecessor,Santhome wedding hall,Four people arrested,arrest
× RELATED பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி...