×

மாதவரத்தில் பெரும் பரபரப்பு டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி

சென்னை: மாதவரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரட்டைக் குழந்தைகள் இறந்தன. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் தணிகாசலம்  நகர் எப் பிளாக்கை சேர்ந்தவர் சந்தோஷ். அதே பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கஜலட்சுமி. இவர்களுக்கு தக்‌ஷன் (7), தீக்‌ஷா (7) ஆகிய இரட்டை குழந்தைகள் இருந்தனர். இருவரும்  அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்தனர். கடந்த வாரம் இரட்டையர்கள் இருவருக்கும் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், காய்ச்சல் குறையவில்லை.

எனவே, கடந்த 20ம் தேதி, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரின் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தபோது, டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி தீக்‌ஷா பரிதாபமாக இறந்தாள். இதைதொடர்ந்து, நேற்று காலை 8  மணியளவில் தக் ஷனும் சிகிச்சை பலனின்றி இறந்தான். இதை அறிந்ததும், பெற்றோர் கதறி அழுதனர். தாய் கஜலட்சுமி மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டெங்கு காய்ச்சலுக்கு இரட்டையர்கள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மக்கள் கூறுகையில், ‘தணிகாசலம் நகரில் எங்கு பார்த்தாலும் கழிவுநீரும்  சாக்கடையும் கலந்துள்ளது. இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. மலேரியா உள்பட பல்வேறு காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள்  உயிரிழந்துள்ளனர். இதனால், இங்கு வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். டெங்கு பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். கடந்த 14ம் தேதி மணலியை சேர்ந்த பள்ளி மாணவன்  கவியரசன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தவம் இருந்து 5 ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள்
சந்தோஷ், கஜலட்சுமி தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் குழந்தைகள் இல்லை. இதனால் குழந்தை வரம் வேண்டி பல்வேறு கோயில்களுக்கு விரதம் இருந்து சென்று வந்தனர். அதன்பிறகு ஒரே பிரசவத்தில் ஆண் மற்றும்  பெண் குழந்தைகள் பிறந்தன. 5 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தைகளை, கண்ணின் மணியை போல் பாதுகாத்து வளர்த்து வந்தனர். திடீரென அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, ஒரே நேரத்தில் 2 குழந்தைகளையும் இழந்ததால்  கதறி அழுதனர். இது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைவரையும் கண் கலங்க செய்தது.

டாக்டர்கள் போராடியும் மீட்க முடியவில்லை
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, ஒரு குழந்தைக்கு திடீரென ரத்த கசிவு உண்டாகி, வலிப்பு ஏற்பட்டது. மற்றொரு குழந்தைக்கு  ரத்த அழுத்தம் குறைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், 2 பேரையும் காப்பாற்ற கடுமையாக போராடினர். ஆனாலும், உயிரை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

தந்தை கதறல்
குழந்தைகளை இழந்த தந்தை சந்தோஷ் கூறுகையில், ‘நான் ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்க்கிறேன். திருமணமாகி 5 ஆண்டுகள் குழந்தை இல்லாததால், பல கோயில்களுக்கு சென்று பல்வேறு வேண்டுதல்கள் மூலம்  இந்த 2 குழந்தைகளும் பிறந்தன. சில நாட்களுக்கு முன் 2 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு ரத்த பரிசோதனையில் வைரஸ் காய்ச்சல் என கூறினார்கள். இதையடுத்து,  எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சேர்த்ேதாம். அங்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், குணமடைந்து வீடு திரும்புவார்கள் என எதிர் பார்த்தோம்.  ஆனால் நேற்று இரவு மகளும், இன்று காலை மகனும் இறந்ததனர். இதனால், எங்கள் வாழ்க்கையை நாங்கள் இழந்துவிட்டோம்’ என கதறி அழுதார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : babies , Madavaram, dengue fever, two children killed
× RELATED தமிழ் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள் வேலூர் அரசு மருத்துவமனையில்