×

சட்டவிரோத குட்கா விற்பனை வழக்கு 2 அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் அதிகாரிகள் செந்தில் முருகன், நவநீத கிருஷ்ண பாண்டியன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.  தமிழ்நாட்டில் தடை செய்யபட்ட குட்கா பொருட்களை  விற்பனை செய்ததாக  ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உடந்தையாக இருந்த மத்திய கலால்துறை அதிகாரி  நவநீதகிருஷ்ண பாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், சிவக்குமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்களில் அரசு அதிகாரிகளான செந்தில் முருகனும், நவநீதகிருஷ்ண பாண்டியனும் ஜாமீன் கோரி  சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி திருநீல பிரசாத் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான  வக்கீல்கள், மனுதாரர்கள் கடந்த 45 நாட்களாக சிறையில் இருப்பதாலும் சிபிஐ தரப்பில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும், எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், விசாரணை இன்னும் முடிவடையவில்லை. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, விசாரணை முடிவடையாத நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என்று உத்தரவிட்டார். இதையடுத்து, இருவர் தரப்பிலும் ஆஜரான வக்கீல்கள், ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர்.இதை  ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவரின் மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து  மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டரும் முன்ஜாமீன் மனு
குட்கா வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சம்பத், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சம்பத் மீது இதுவரை சிபிஐ எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதை பதிவு செய்த  நீதிபதி, வழக்கு இல்லாத நிலையில் முன்ஜாமீன் மனு தேவையற்றது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court , High court
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...