×

ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழா துவங்கியது

திருச்சி: புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழா. புஷ்கர திருவிழா ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்தந்த ராசிகளுக்கு உரிய நதிகளில் நடைபெறுவது ஆகும். மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் புஷ்கரமானவர் குருபெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்வதாகவும், குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு இடம் பெயரும் போது துலா ராசிக்கு உரியவரான காவிரி நதியில் புஷ்கரமானவர் 12 நாட்கள் வாசம் செய்வதாகவும் ஐதீகம்.

அதன்படி காவிரி மகாபுஷ்கரம் கடந்தாண்டு செப்டம்பர் 12 முதல் 24ம் தேதி வரை ரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவிற்காக ரங்கம் அம்மாமண்டபம் அடுத்த மாமுண்டி கோனார் திடலில் கடந்த 12ம் தேதி யாகசாலை பந்தல் கால் நடும் விழா நடைபெற்றது. பின்னர் அங்கு யாகசாலை மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டது. ஓராண்டு நிறைவு விழாவின் தொடக்க நாளான நேற்று மண்ணச்சநல்லூரை அடுத்த கோபுரப்பட்டியில் இருந்து கல்யாண உற்சவர்கள் ஆதிநாயகப் பெருமாள், தாயாருடன் ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வழியாக மாமுண்டி கோனார் திடலில் உள்ள யாகசாலைக்கு வந்தடைந்தது.

பின்னர் காலை 5.45 மணிக்கு கோபூஜை, 6 மணிக்கு விஷ்வக்சேன யாகம், 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம், மாலை 3.30 மணிக்கு ஹரிநாம பஜனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு துலா மாத ஆரத்தி நடை பெற்றது. யாகசாலை திடலில் மாலை 6.15 மணிக்கு திரு விளக்கு பூஜை நடந்தது. விழா நடைபெறும் 4 நாட்களும் மாலை காவிரி தாய்க்கு துலா மாத ஆரத்தி மற்றும் மகான்களின் ஆசியுரைகளும் பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cauveri Maha Pushkaram ,festival ,Srirangam , Srirangam, Kaveri Maha Pushkaram, one year festival
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...