×

தாமிரபரணி மகா புஷ்கர விழா ஒரே நாளில் 6 லட்சம் பேர் புனித நீராடல்: அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் அவதி

நெல்லை: தாமிரபரணி  மகா புஷ்கர விழாவையொட்டி 11வது நாளான நேற்று நெல்லை, தூத்துக்குடி தீர்த்த  கட்டங்களில் ஒரே நாளில் 6 லட்சம் பேர் புனித நீராடினர். தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11ம்தேதி தொடங்கியது. வரும் 23ம் தேதி வரை  நடக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள முக்கிய தீர்த்த  கட்டங்களில் தினமும் ஏராளமான பக்தர்கள்  புனித நீராடி வருகின்றனர். புஷ்கரம் துவங்கிய 4 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் புனித நீராடிச் சென்றனர். இந்நிலையில் தசரா பண்டிகையை முன்னிட்டு இம்முறை 4 நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக அமைந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நெல்லை, தூத்துக்குடியில் மக்கள் குவியத்துவங்கினர். விடுமுறை தினமான நேற்று காலையில் மட்டும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  தீர்த்த கட்டங்களில் சுமார் 6 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். பெண்கள் அகல் விளக்கு ஏற்றியும்,  படித்துறைகளில் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தினர்.  இதேபோல் சீவலப்பேரி துர்காம்பிகா ேதவஸ்தானம் டிரஸ்ட் சார்பில் காலையில் மிருத்யுஞ்ஜெய வேள்வி நடந்தது.  மாலையில் மகா ஆரத்தி நடந்தது.

குரு ஸ்தலமான முறப்பநாட்டில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 4 மணிக்கே பகதர்கள் முறப்பநாடு காசி தீர்த்தகட்டத்துக்கு வந்து நீராடி கைலாசநாதரை வணங்கி சென்றனர். மழை பெய்த காரணத்தினால் வாகனங்களை ஊருக்குள் உள்ள வயல்வெளிகளில் நிறுத்த இயலவில்லை. எனவே வாகனங்கள் நான்குவழிச்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன. பக்தர்கள் கூட்டத்தையொட்டி நெல்லை-தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் முறப்பநாடு பகுதியில் ஒருவழிப்பாதையாக மாற்றி விடப்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் நடந்து வந்து நீராடினர். கைலாசநாதர் கோயிலிலுக்குள் தரிசனம் செய்பவர்கள் சுமார் 1 கிலோ மீட்டருக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.முறப்பநாட்டில் அதிருத்ர பெருவேள்வி நடந்தது. இதில் 121 வேத விற்பன்னர்கள் ருத்ர பாராயணம் செய்தனர்.  இதேபோல் திருஆவளி பாறை தீர்த்தகரையான ஆழிகுடியில் மாரடிச்சான் சுடலை கோயில் அருகில் யாகசாலையில் தீர்த்தம் எடுத்து பூஜைக்கு வைக்கப்பட்டது.

பின்னர் கணபதி ஹோமம், கோ பூஜை, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டது.
நெல்லையில் பக்தர்களுக்கு போதிய கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதனால் காலையில் ரயில்  வந்திறங்கும் பக்தர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். புஷ்கர விழாவின் கடைசி இரு நாட்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் அடிப்படை வசதிகள் இல்லாதது  வருத்தம் அளிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamiraparani Maha Pushkara Festival ,pilgrims , Thamiraparani, Maha Pushkara Festival, Holy Wilderness
× RELATED காஷ்மீரில் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் விஎச்பி கலெக்டரிடம் மனு