×

விவசாயிகளின் தற்கொலை கொலைக்கு சமம்: மத்திய, மாநில அரசுகள் மீது கமல் கடும் தாக்கு

சென்னை: ‘மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் எதிரான நிலைப்பாடு எடுத்து வருகின்றனர். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது, கொலைக்கு சமம்’’’’ என்று, கமல்ஹாசன் கடுமையாக தாக்கியுள்ளார்.  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேற்று அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்கள் வி.எம்.சிங் (ராஷ்டிரிய கிசான் மஸ்தூர் கட்சி தேசிய தலைவர்), ராஜு ஷெட்டி எம்பி ஆகியோர் சந்தித்தனர். அப்போது, வரும் நவம்பர் 28, 29, 30 தேதிகளில், ‘விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் டெல்லியில் நடத்தும் கூட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவு கோரினர்.

சந்திப்பின்போது, தமிழக விவசாயி இயக்கங்களின் கூட்டு இயக்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் தலைவர் பி.அய்யாக்கண்ணு, நிர்வாகிகள் உடனிருந்தனர்.முன்னதாக கமல்ஹாசன் பேசியதாவது: தற்போது ஆளும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் எதிரான நிலைப்பாடு எடுத்து வருகின்றனர். ஏழை விவசாயிகள் குறித்து எந்த அக்கறையும் காட்டாமல் நிதிக்கொள்கை வகுக்கின்றனர். தங்க பிஸ்கட்டுக்கு குறைந்த வரி வசூலிக்கும் அரசு, சாப்பிடும் பிஸ்கட்டுக்கு கூடுதல் வரி நிர்ணயிக்கிறது. 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியவர்கள் வெளிநாட்டில் உல்லாசமாக இருக்கின்றனர். ஏழை விவசாயிகள் கடுமையான கடன் சுமையால் நம் நாட்டில் அவதிப்படுகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யக்கூடிய சூழல் இருக்கும்போது, இங்கேயும் அதுபோல் செய்யலாம். 7 ஆயிரம் வருடங்களாக மண்ணுடன் காதல் செய்து வரும் விவசாயி, அந்த மண்மீதான தனது காதல் முறிந்துவிடுமோ என்ற கவலையில் தற்கொலை செய்துகொள்கிறான். ஆற்று மணல் திருடப்படுவதால் விவசாயிகளுக்கு நிலத்தடி நீர் குறைந்து, அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. எனவே, இவற்றை தற்கொலை என்று கடந்துவிட முடியாது. விவசாயிகளின் தற்கொலை, கொலைக்கு சமமாகும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suicide killings ,Kamal kotta attack ,state governments , Farmer, suicide, murder, federal, state governments, Kamal
× RELATED கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்