×

ஜோலார்பேட்டை நகராட்சியில் கொரோனா தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்-நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் கொரோனா தொற்றின் காரணமாக நகராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பால் ஜோலார்பேட்டை பகுதியில் 5க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் அதன் பாதிப்பு இரண்டாம் முறையாக தற்போது துவங்கியுள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்த ஜோலார்பேட்டை நகர் பகுதி தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆணையாளர் ராமஜெயம் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் நகரப்பகுதியில் கொரோனா தொற்றின்  பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் இரண்டு டிராக்டர் மூலம் சாலைகள் முழுவதும் உள்ள கடைகள், கட்டிடங்கள் போன்றவற்றிற்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் நகராட்சி பொறியாளர் தனபாண்டியன், சுகாதார ஆய்வாளர் உமா சங்கர், உள்ளிட்ட அலுவலர்கள் பொதுமக்களிடத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனாவின் தாக்கத்திலிருந்து விடுபடவேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணியாமல் நகர்ப்பகுதியில் சுற்றித்திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் நகராட்சி அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்….

The post ஜோலார்பேட்டை நகராட்சியில் கொரோனா தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்-நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Zolarpet ,Corona pandemic ,Jolarbett ,Dinakaran ,
× RELATED கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான...