×

கூடங்குளத்தில் பழுதடைந்துள்ள அணு உலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: கூடங்குளத்தில் பழுதடைந்துள்ள அணு உலைகளை  சுதந்திரமான குழுவைக்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கையாளுவதற்கான தொழில்நுட்பம் தங்களிடத்தில் இல்லையென்றும், இந்தியாவில் இதுவரை இதைக்கையாண்டதும் கிடையாது என்றும், உச்ச நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கில் தேசிய அணுமின் கழகம் தெரிவித்திருக்கும் பதில் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், அணுகழிவு மேலாண்மை மையம் அமைக்க ஐந்தாண்டுகால அவகாசத்தை உச்ச நீதிமன்றத்தில் கேட்டு அதற்குரிய அனுமதியை பெற்றுள்ளது தேசிய அணுமின் கழகம். ஏற்கனவே கூடங்குளம் அணு உலையில் உலகில் எங்கும் இல்லாத வகையில் 4 ஆண்டுகளில் 50 முறை பழுது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் தங்கமணி 3 மாதங்களாக கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். மக்களுக்கு பயனளிக்காத நிலையில் இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இல்லை என்று தெரிவித்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் அணு கழிவுகள் தேசத்தின் சொத்து, கழிவுகளை மறுசுழற்சி மையங்களுக்கு கொண்டு சென்று மறுசுழற்சி செய்து அணு கழிவு மேலாண்மை மையங்களில் பாதுகாக்க முடியும் என்று ஜெயலலிதாவிடம் தேசிய அணுமின் கழகம் உறுதி கூறித்தான் அணு உலைகளை இயக்க அனுமதி கோரினார் என்பது அனைவரும் அறிந்ததே. கூடங்குளத்தில் மின் உற்பத்தி ஏதுமில்லாமல், அணு கழிவுகளை கையாளுவது குறித்து எந்த திட்டமும் இல்லாமல், அணு உலைகள் தொடர்ந்து பழுதாவது குறித்து எந்த நடவடிக்கையோ, விசாரணையோ ஏதுமின்றி தமிழக அரசு மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் இருப்பது தமிழக அரசின் அலட்சியபோக்கையே காட்டுகிறது. லட்சக்கணக்கான மக்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மாநில அரசையே சாரும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.  மேலும், 50க்கும் மேற்பட்ட முறையில் பழுதடைந்துள்ள அணு உலைகள் 1 மற்றும் 2 குறித்து சுதந்திரமான குழுவைக்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : committee ,Kudankulam ,reactors ,TDV , Kudankulam , TTV dinakaran
× RELATED சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ...