×

கபாலீஸ்வரர் கோயிலில் 3 சிலைகள் காணாமல் போன விவகாரம் கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டில் போலீசார் திடீர் சோதனை: அறநிலையத்துயில் பரபரப்பு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 3 சிலைகள் காணாமல் போன விவகாரத்தில் கூடுதல் ஆணையர் திருமகளிடம் 3வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், அவரது வீட்டில் சோதனை நடத்திய சம்பவம் அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சிலை, ராகு, கேது சிலைகள் காணாமல் போனதாக சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக கோயில் இணை ஆணையர் காவேரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடந்த 11ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி  பொன்.மாணிக்கவேல் திடீரென கபாலீஸ்வரர் கோயிலுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் கோயில் இணை ஆணையர் காவேரி, கூடுதல் ஆணையர் திருமகளிடம் விசாரணை நடத்தினார்.தொடர்ந்து, நேற்று முன்தினம் 2வது நாளாக கூடுதல் ஆணையர் திருமகளிடம் ஏஎஸ்பி அசோக் நடராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கூடுதல் ஆணையர் திருமகள், சிலை சேதமடைந்ததாக  கூறி அர்ச்சகரின் பரிந்துரையின் பேரிலேயே சிலை மாற்றப்பட்டது. ஆனால், சிலை மாற்றியதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. புதிய சிலை மாற்றிய உடனேயே பழைய சிலையை புதைக்க வேண்டும். ஆனால், சிலையை  புதைத்தார்களா என்பது எனக்கு தெரியாது. சேதமடைந்த சிலை கோவில் அர்ச்சகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலை எங்கிருக்கிறது என்று எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் 3வது நாளாக நேற்று வியாசர்பாடி, கருணாநிதி சாலை 6வது தெருவில் கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி குமார், ஏஎஸ்பி அசோக் நடராஜன் தலைமையிலான  போலீசார் சோதனை நடத்தினார். தொடர்ந்து கூடுதல் ஆணையரிடம் விசாரணை நடத்தினர். அப்ேபாது அவரிடம், ‘சிலைகளை மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்த கோயில் அர்ச்சகர் யார், சிலையை எந்த அர்ச்சகரிடம்  ஒப்படைத்தீர்கள், 3 சிலைகளை புதைக்க அறிவுறுத்தினீர்களா’ உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அவர்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு ஞாபகம் இல்லை, தெரியாது என்றே பதில் அளித்தார்.மேலும், சிலைகள் காணாமல் போனால் பொறுப்பு யார் என்று அதிகாரிகள் கேட்டதற்கு செயல் அலுவலர் தான் பொறுப்பு என்று தெரிவித்தார். அப்படியெனில் உங்களுக்கு பொறுப்பு இருக்கிறது என்று தெரிந்தும் நீங்கள் ஏன் சிலை  புதைக்கப்பட்டது குறித்து கேட்வில்லை என்று கேட்டனர். இதற்கு, கூடுதல் ஆணையர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பெரும்பாலான கேள்விகளுக்கு அறநிலையத்துறை சட்டத்தை எடுத்து காட்டியே  கூடுதல் ஆணையர் பதில் அளித்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினார். பின்னர் மீண்டும் தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்போம் என்று கூறி விட்டு போலீசார் கிளம்பியதாக  கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்த கட்டமாக கோயில் அர்ச்சகர்களிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு முக்கிய புள்ளிகள் பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. காரணம்,  கும்பாபிஷேகம் நடந்த காலகட்டத்தில் திருப்பணி பிரிவில் இருந்த ஓய்வு பெற்ற ஆணையர் ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதால் பல தலைகள் சிக்க வாய்ப்புள்ளது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்  வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : idols ,Commissioner ,house Police raids ,Tirumala , 3 idols disappeared,Kapaleshwarar,Additional Commissioner ,Tirumala's house ,Police raids:
× RELATED தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 1,054...