×

முல்லை பெரியாற்றில் தோட்டா வெடி மூலம் மீன்பிடிக்கும் கும்பல்

கம்பம் : கம்பம் பகுதி முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் குறைவாக வரும் நேரங்களில் வெடி மருந்து மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன் இனம் பாதிக்கப்பட்டு வருகிறது. கம்பம் பகுதியில் உள்ள காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக தூண்டில் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி ஜிலேபி, ஆறா, கெண்டை உள்ளிட்ட மீன்களையும் சேறும், சகதியும் நிறைந்த இடங்களில் அயிரை மீன்களை பிடித்தும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் குறைவாக வரும் நேரங்களில் சில சமூக விரோதிகள் தோட்டா எனப்படும் வெடிப்பொருள்கள் மற்றும் பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்கின்றனர். இதனால் சிறு குஞ்சுகள் அழிந்து வடுகின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே முறையாக மீன்பிடி தொழில் செய்பவர்கள் மாற்றுத்தொழில்களுக்கு சென்று விட்டனர். இந்த செயல்களால் மீன்களின் இனப்பெருக்கம் பெருமளவு பாதிக்கப்பட்டு தற்போது கடும் பற்றாக்குறை காரணமாக அயிரை மீன் கிலோ 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `` அயிரை மீனில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் நோயாளிகள் பலர் இதை விரும்பி வாங்குகின்றனர். பலர் முன்கூட்டியே பணம் கொடுத்து பிடித்து வர சொல்கின்றனர். இதனால் இதற்கு எல்லா நேரங்களில் கிராக்கியாகவே உள்ளதால் தற்போது கிலோ ரூ. 1000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mullai Periya , mullai periyar, fishes, bullet explosives,cumbum
× RELATED சென்னை கூவம் ஆற்றின் கழிவு நீர் கலப்பதை தடுக்க நிதி ஒதுக்கீடு