×

சோதனையில் மாதவராவின் குடோனில் கைப்பற்றியது என்ன? விழுப்புரம் எஸ்பி ஜெயகுமாரிடம் சிபிஐ 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை: உரிய ஆவணங்களுடன் இன்று ஆஜராக உத்தரவு

சென்னை: குட்கா வழக்கில் விழுப்புரம் எஸ்பி ஜெயகுமாரிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். தமிழக அரசு குட்கா  மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட பிறகு, தடையின்றி விற்பனை ெசய்ய அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என பல முக்கிய அதிகாரிகள் ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து டிஜிபி. டிகே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர். சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம், குட்கா தயாரிப்பாளரான மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் மற்றும் மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவகுமார் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

முன்னதாக முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்ற அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பு குற்றம் சாட்டினர். அப்போது ஜெயக்குமார் பல உண்மைகளை என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார். அதைதொடர்ந்து செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத்தை சிபிஐ அதிகாரிகள் நேரில் அழைத்து 7 மணி ேநரம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் காவல் துறையில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் பட்டியலை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் துணை கமிஷனர் ஜெயகுமார் குறித்து பல தகவல்கள் அளித்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள ஜெயகுமாரை நேரில் ஆஜராக நேற்று முன்தினம் சம்மன் அனுப்பினர். அதன்படி காவல் கண்காணிப்பளர் ஜெயகுமார் நேற்று காலை 11.30 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

அப்போது, கைதானவர் கள் அளித்த வாக்குமூலத்தின் படி, குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த போது மாதவராவ் குடோனில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன? கைப்பற்றிய ஆவணங்கள் யாரிடம் ஒப்படைத்தீர்கள். 2013-16ம் ஆண்டு காலத்தில் மாதவராவ் உங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் ெகாடுத்ததாக தெரிவித்துள்ளாரே? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் நீங்கள் மாதவராவ் குடோனில் சோதனை நடத்தியது அவருக்கு தெரியாது என்று கூறியுள்ளாரே? உயர் அதிகாரிக்கு தெரியாமல் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்ததால் உங்களது ஆண்டு பணித்திறன் அறிக்கையில் (ஏசிஆர்) 2 மதிப்பெண் மட்டுமே போட்டுள்ளாரே?. அந்த அறிக்கையில் நீங்கள் பணம் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளாரே? உங்கள் மீது கூறிய அனைத்து குற்றச்சாட்டும் உண்மையா? என்பது உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர்.

அதற்கு அவர், நான் யாரிடமும் லஞ்ச பணம் பெறவில்லை. உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி தான் நான் நடந்து கொண்டேன். குட்கா வழக்கில் உயர் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து என்னை சிக்க வைத்துள்ளார்கள் என்று கூறியதாக சிபிஐ வட்டாரத்தில் தெரிவித்தனர். 7 மணி நேரம் நடந்த தொடர் விசாரணை மாலை 6.30க்கு முடிவடைந்தது. இரண்டாவது நாளான இன்றும் விசாரணக்கு ஆஜராக சிபிஐ அதிகாரிகள் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாருக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆஜராகும் போது வங்கி கணக்கு மற்றும் சொத்துப்பட்டியல் குறித்த ஆவணங்களை எடுத்துவரும் படி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை துணை இயக்குநரிடம் விசாரணை
குட்கா வழக்கில் லஞ்சம் வங்கியது தொடர்பாக சிபிஐ பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கடந்த 2015ம் ஆண்டு மத்திய கலால் வரி புலனாய்வு பிரிவின் உதவி இயக்குநராக இருந்தவரும், தற்போது அமலாக்கத்துறை துணை இயக்குநராக உள்ள எஸ்.கே.ஷெரோன், குட்கா விவகாரத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ேநற்று முன்தினம் நேரில் ஆஜராக எஸ்.கே.ஷெரோனுக்கு சம்மன் அனுப்பினர். அதன்படி அவர் நேற்று காலை 11.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது,  மத்திய கலால் வரி புலனாய்வு பிரிவில் உதவி இயக்குநகராக இருந்தபோது மாதவராவிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். குட்கா விற்பனைக்கு தமிழக அரசு தடை செய்யப்பட்ட பிறகு அனுமதி அளித்தது ஏன் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். குட்கா வழக்கில் சிக்கியுள்ள எஸ்.கே.ஷேரோன் குடியரசு தலைவர் விருது ெபற்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madhavara ,Kuton ,CBI ,SPP Jaikumar , Trial, Madhavara, Villupuram SP Jeyakumar, Investigation:
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...