×

நெல்லையில் பக்தர்கள் குவிந்தனர் தாமிரபரணி மகா புஷ்கரம் இன்று தொடங்குகிறது

நெல்லை: வற்றாத ஜீவநதியாக நெல்லை, தூத்துக்குடியில் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மகாபுஷ்கர விழா இன்று (11ம் தேதி) துவங்கி வரும் 23ம் தேதி வரை சிறப்பாக நடக்கிறது. இதற்காக தாமிரபரணி நதிக்கரையில் 64 தீர்த்தக்கட்டங்களும், 143 படித்துறைகளும் உள்ளன. புஷ்கர விழாவையொட்டி இவற்றில் நீராட நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விழாவில் முக்கிய தீர்த்த கட்டங்களில் துறவியர்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.  இன்று  காலை 10.30 மணிக்கு நடக்கும் விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தாமிரபரணி மகா புஷ்கர விழா மலரை வெளியிட்டுப் பேசுகிறார். ராம்கோ குழுமங்களின் தலைவர் வெங்கட் ராமராஜா, சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி ஆகியோர் மலரை பெற்றுக் கொள்கின்றனர். விழாவில் அகில பாரத துறவிகள் சங்க பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், இமாசல பிரதேச முன்னாள் கவர்னர் விஷ்ணு ஸதாசிவ் கோக்ஜே உள்ளிட்டோர் பேசுகின்றனர்.  மாலை 5.30 மணிக்கு நெல்லை ஜடாயு தீர்த்தத்தில் நடக்கும் புஷ்கர விழாவிலும் கவர்னர் பங்கேற்கிறார்.

பக்தர்கள் பாதுகாப்போடு நீராடுவதற்கு வசதியாக ஆழமான ஆற்று பகுதிகளில் மணல் மூட்டைகள் குவிக்கப்பட்டுள்ளன. சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு நேற்று முதலே வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். கொல்கத்தாவில் இருந்து நேற்று நெல்லை வந்த ஹவுரா எக்ஸ்பிரசில் வடமாநில பக்தர்கள் பலர் இறங்கி குறிப்பிட்ட தீர்த்தங்களுக்கு பயணமாகினர். பக்தர்கள் வருகை காரணமாக நெல்லையில் உள்ள அனைத்து லாட்ஜ்களும் நிரம்பி வழிகின்றன. சிறப்பு ரயில்கள்:  நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதற்கு வசதியாக தெற்கு ரயில்வே 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க உள்ளது. இந்த ரயில்கள் அனைத்தும் தாம்பரம் - நெல்லை இடையே இயக்கப்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி தீர்த்த கட்டங்களுக்கு பயணிகள் செல்ல வசதியாக ஆட்டோக்கள், வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக சுமார் 40 பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamiraparani Maha Pushkaram , Nellai, Thamiraparani, Maha Pushkaram, starts
× RELATED வீட்டுமனை பட்டா வழங்குவதில் உள்ள...