×

குமரியில் பெண்ணை கொன்று செயின் பறித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கஞ்சா, திருட்டு மது விற்பவர்கள், பாலியல் தொல்லை வழக்குகளில் கைதாகிறவர்கள் உள்ளிட்ட பலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள தர்மபுரம் அருகே உள்ள கல்வீரயன்விளை பகுதியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டியன். இவரது மகன் அபிஷந்த் (23). இவர் மீது ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் மேலும் ஒரு கொலை முயற்சி வழக்கில், ராஜாக்கமங்கலம் போலீசார் அபிஷந்த்தை கைது செய்து, நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இவர் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், இவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு எஸ்.பி. பத்ரிநாராயணன், கலெக்டர் அரவிந்த்துக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று, அபிஷந்த்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் ரமா, தலைமையிலான போலீசார் அபிஷந்த்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இதே போல் திருவட்டார் அருகே உள்ள மணக்குன்று பகுதியை சேர்ந்தவர் முத்துநாடார். இவரது மகன் பிரபு (34). இவர் கொலை வழக்கில் கைதாகி, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க, எஸ்.பி. பத்ரி நாராயணன்  பரிந்துரையின் பேரில் கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து, கோட்டார் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி டேவி ஆனந்த், பிரபுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை சிறையில் அடைத்தார். அழகியபாண்டிபுரம் குறத்தியறை பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மகேஷ் (25). இவர் மீது வடசேரி மற்றும் பூதப்பாண்டி காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், இவரும் கோட்டார் காவல் நிலைய பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி. பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து கோட்டார் போலீசார், மகேசை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் பாளை சிறையில் அடைத்தனர். பிரபு மற்றும் மகேஷ் இருவரும், நாகர்கோவில் ஓட்டல்  தொழிலாளி கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள் ஆவர்.  திருவட்டார் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் மெர்லின் என்ற மெர்லின் ராஜ். இவரை கொலை வழக்கில் திருவட்டார் போலீசார் கைது செய்திருந்தனர். இவர் மீது ஏற்கனவே தக்கலை, திருவட்டார் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவரும் குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், பெண்ணை குளத்தில் தள்ளி கொலை செய்து செயின் பறித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தில் இதுவரை 16 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post குமரியில் பெண்ணை கொன்று செயின் பறித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagarko ,Kumari district ,
× RELATED குமரி மாவட்டத்தில் உணவு, காய்கறி கழிவில் இருந்து எரிவாயு தயாரிப்பு