×

‘பொருளை எடுத்துட்டு வாடா போலீசை போட்டுருவோம்...’ காவலருடன் ரவுடிகள் நடுரோட்டில் சண்டை

திண்டுக்கல்:  திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிபவர் பாண்டி (35). நேற்று முன்தினம் காலை இவர் பாரதிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த ராகவன் (30), ரங்கன் (30) ஆகிய இருவர், டூவீலரில் குடிபோதையில் சத்தம் போட்டவாறு வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய பாண்டி, ‘‘ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள்’’ என கேட்டுள்ளார். அதற்கு இருவரும் சேர்ந்து, ‘‘எங்களையே கேள்வி கேட்கிறாயா... நாங்கள் யார் தெரியுமா’’ எனக்கூறி பாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.  மேலும் அவரிடமிருந்த வாக்கிடாக்கி, செல்போனை பறித்து கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர ரங்கன் தப்பித்து விட்டார். ராகவனை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். தகவலறிந்து தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராகவனை கைது செய்தனர். தப்பியோடிய ரங்கனை தேடி வருகின்றனர். காயமடைந்த பாண்டி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராகவன், ரங்கன் மீது தெற்கு காவல்நிலையத்தில் கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காவலர் பாண்டியுடன், இருவரும் வாக்குவாதம் செய்து சண்டைபோடும் காட்சி வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் ரங்கனும், ராகவனும் காவலர் பாண்டியை பார்த்து, ‘‘என்ன டிரான்ஸ்பார்ம் (டிரான்ஸ்பர்) வேணுமா... எந்த ஊரு நீயு... லைசென்ஸ்லாம் தர முடியாது... போலீஸ்னா பெரிய இதுவா... நாங்க யார் தெரியுமா... பிரபல ரவுடிட்ட பேசிக்கிட்டிருக்க, மாவட்ட தலைவராக இருக்கேன்... டேய் பொருளை எடுத்துட்டு வாடா... போட்டுருவோம்’’ என செல்போனையும், வாக்கிடாக்கியையும் பறித்து கொண்டு ரகளையில் ஈடுபட்டது பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fighting with the police, gangsters, drunken
× RELATED சட்டசபை தேர்தலில் போட்டியா? நடிகை குஷ்பு பேட்டி