×

தேனி அருகே வாக்குசேகரிப்பு: இலவச மின்விசிறி வாங்கிட்டு கம்முன்னு இருக்கீங்களே…?: பெண்களிடம் ஓபிஎஸ் டென்ஷன்

தேனி: தேனி பழனிசெட்டிபட்டியில் நேற்று காலை வாக்கு சேகரித்த ஓபிஎஸ், ஜெயலலிதா பெண்களுக்காக அதை செய்தார்; இதை செய்தார் என அடுக்கிக் கொண்டு போனார். இதை பெண்கள் கண்டுகொள்ளாததால், ‘‘இலவசங்களை எல்லாம் வாங்கிட்டு கம்முன்னு இருக்கீங்களே.. சொல்லுங்க மின்விசிறி வாங்கினீங்களா இல்லையா’’ என டென்ஷன் அடைந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதிக்குட்ட தேனி பழனிசெட்டிபட்டியில் நேற்று காலை 7 மணிக்கு, அதிமுக வேட்பாளர் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வாக்கு சேகரிப்பை தொடங்குவதாக இருந்தது. இதற்காக 200க்கும் மேற்பட்ட பெண்களை அதிமுகவினர் வாகனங்களில் அழைத்து வந்து காலை 6.30 மணிக்கே பழனிசெட்டிபட்டியில் ஒரு தியேட்டருக்கு முன், கைகளில் இரட்டை இலை சின்னங்களை கொடுத்து நிறுத்தியிருந்தனர்.ஆனால், 7 மணிக்கு வருவதாக இருந்த ஓபிஎஸ் வரவில்லை. வெயில் ஏற, ஏற கால்கடுக்க நின்றிருந்த பெண்கள் நெளிய தொடங்கினர். மூன்று மணி நேரம் தாமதமாக, காலை 10 மணிக்கு வந்த ஓபிஎஸ், அங்கு கூடியிருந்த பெண்கள் மத்தியில் பேசுகையில், ‘‘ஜெயலலிதா அரசு பெண்கள் மீது தனிக்கவனம் செலுத்தி இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கியது, இலவசங்களை எல்லாம் வாங்கினீர்களா?’’ என்று கேட்டார்.அவரது பேச்சுக்கு பெண்கள் மத்தியில் எந்தவித பதிலோ, சலனமோ இல்லாமல் இருந்தது. இதைப் பார்த்த ஓபிஎஸ் ஒரு கட்டத்தில், ‘‘என்ன… கம்முன்னு இருக்கீங்க….? சொல்லுங்க, மின்விசிறி வாங்கினிங்களா…. இல்லையா?’’ என்று டென்ஷனாக கேட்டு பிரசாரத்தை முடித்தார். ‘‘இவர்கள் கொடுத்த மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் எல்லாம் கொடுத்த சில நாட்களிலேயே பழுதாகி விட்டது. இதையெல்லாம் சாதனை என்று சொன்னால் எப்படி?’’ என்று அங்கிருந்த பெண்கள், தங்களை அழைத்து வந்த நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியதால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது….

The post தேனி அருகே வாக்குசேகரிப்பு: இலவச மின்விசிறி வாங்கிட்டு கம்முன்னு இருக்கீங்களே…?: பெண்களிடம் ஓபிஎஸ் டென்ஷன் appeared first on Dinakaran.

Tags : Theni ,OPS ,Jayalalithaa ,Theni Palanisettipatti ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...