சென்னை: தண்டையார்பேட்டை பகுதிகளில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது, 2 பைக்கில் வந்த 4 பேரை மறித்து நிறுத்தி விசாரித்தனர். அதில், ஒருவர் கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம் 1வது தெருவை சேர்ந்த லட்சுமணன் (21) என்பதும், திலகர் நகரை சேர்ந்த ஜீவா என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றாளி என்பதும், கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த லட்சுமணன், பிரபாகரன் ஆகிய இருவரும், மீண்டும் சிறைக்கு செல்லாமல் மேல்மலையனூர் பதுங்கி, இரவு நேரத்தில் குடும்பத்தினரை பார்க்க சென்னைக்கு வந்து சென்றதும் தெரியவந்தது. மற்ற 3 பேர் மீது எந்த வழக்குகளும் இல்லாததால், அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
லட்சுமணன் கொடுத்த தகவலின்பேரில், திருவண்ணாமலை மாவட்டம், மேல்மலையனூர் மேட்டு தெருவை சேர்ந்த பிரபாகரன் (எ) பிரபு (26), மேல்மலையனூர், பஜார் சந்து தெருவை சேர்ந்த ராஜ்குமார் (18), மேல்மலையனூர் வாணியர் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (27) என ஆகிய 3 பேரை மேல்மலையனூரில் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வீடுகளில் இருந்த 20 பட்டா கத்திகள், 2 பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதிகளவில் பயங்கரமான கத்திகளை வீட்டிற்குள் அவர்கள் பதுக்கி வைத்திருந்ததால், யாரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள், இவர்களுக்கு பெரிய தாதாக்களுடன் தொடர்பு உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
* புழல் செக்போஸ்ட், ஜிஎன்டி சாலை பகுதியை சேர்ந்த நாகராஜ் (41) என்பவர் வீட்டின் நேற்று முன்தினம் புகுந்த மர்ம ஆசாமிகள், பீரோவில் இருந்த கால் சவரன் தங்க மோதிரம், 2 வெள்ளி கொலுசு மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடித்து தப்பி உள்ளனர்.
* புரசைவாக்கம், பிரிக்ளின் சாலையில் உள்ள ஓட்டலில் ஹுக்கா பார் நடத்தி வந்த ஓட்டல் ஊழியர்கள் சவுகார்பேட்டை கபில் (21), குஸ்வந்த் (23) மற்றும் மண்ணடியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
* பல்லாவரம் அடுத்த பம்மல், மூவேந்தர் நகர், ஸ்டாலின் தெருவை சேர்ந்த் கால் டாக்சி டிரைவர் பால்ராஜ் (29) என்பவர் காதல் தோல்வியால், நேற்று முன்தினம் தற்கொைல செய்து கொண்டார்.
* வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம், ஈச்சங்காடு, அண்ணா நகர், 4வது தெருவை சேர்ந்த தாமோதரன் (20) என்பவர் நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு முன் பைக்கை நிறுத்திருந்தார். நள்ளிரவில் திடீரென அவரது பைக் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
* திருவல்லிக்கேணி ராம்நகர் 6வது தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி சிவராம் கிருஷ்ணன் (40) என்பவருக்கும், திருவல்லிக்கேணி பெசன்ட் பள்ளி தெருவை சேர்ந்த பாலகுரு (43) என்பவருக்கும் கடந்த 5ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர். படுகாயமடைந்த சிவராமகிருஷ்ணனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிவராமகிருண்ன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் பாலகுருவை கைது செய்தனர்.
* சூளைமேடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி துரை (60) என்பவர், கடந்த சனிக்கிழமை இரவு கோட்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பெட்ேரால் பங்கில் தனது ஸ்கூட்டருக்கு பெட்ரோல் நிரப்ப வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனியார் கடையின் பெயர் பலகை திடீரென முத்து தலை மீது விழுந்ததில் படுகாயமடைந்தார்.
* திருவொற்றியூர் கலைஞர் நகரை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் (40), மனைவி குடும்ப நடந்த வராததால், வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* பள்ளிக்கரணை பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 சவரன் செயின் பறித்தது மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து கலர் டிவி திருடிய துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த செங்கா (எ) தமிழ்வாணன் (34), பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்த சந்துரு (எ) தவக்களை சந்துரு (28), பெரும்பாக்கம் ஜெயா நகரை சேர்ந்த மதன் (எ) மதன் குமார் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
* சென்ட்ரலில் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் (22) என்பவர் தனது நண்பர்கள் இசைபாலன், சுப்பிரமணியுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்களிடம் கத்திமுனையில் 2 சவரன் செயின், பணம் மற்றும் 2 செல்போன்களை பறித்த சிந்தாதரிப்பேட்டை தேவேந்திரன், பூபதி, விஜய் (எ) கோபால், நிஷாந்த் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* கன்னியாகுமரி வாலிபர் ஜெபின் மேசாத் (32) என்பவரிடம் செல்போன் பறித்த வடபழனி விஜி (எ) விஜயகுமார் (19), பார்த்திபன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
