சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கதிரவன் (42), ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா (33) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது. இதுகுறித்து சங்கீதாவின் 17 வயது மகனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தகாத உறவை கைவிடும்படி தாயை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்கள் தொடர்பை கைவிடவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம், சங்கீதாவின் வீட்டிற்கு சென்ற கதிரவன், அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்தார். அப்போது, வீட்டிற்கு வந்த சங்கீதாவின் மகன், இதை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பலமுறை கண்டித்தும், தகாத உறவை கைவிடாமல் தனது வீட்டிற்கே வந்து தாயுடன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரம் அடைந்த சிறுவன், வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து கதிரவனை தாக்க முயன்றார். இதனால் பயந்து போன கதிரவன், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், சிறுவன் விடாமல் துரத்திச் சென்று, அவரை கோடாரியால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த கதிரவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அப்போது, அங்கு வந்து பார்த்த கதிரவனின் தாய் ஜானகி (65), மகன் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த கதிரவனை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
