×

ஓட்டல், டீக்கடை தொழிலாளருக்கு நல வாரியம் அமைக்க வழக்கு: அரசு பரிசீலிக்க உத்தரவு

மதுரை:  ஓட்டல், டீக்கடை தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் ேசர்ந்த பழனியாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு ஓட்டல் தொழிலாளர் நலச்சங்க செயலாளராக உள்ளேன். தமிழகத்தில் ஓட்டல், டீக்கடைகள், உணவு திண்பண்ட விற்பனை நிலையங்கள், தங்கும் விடுதிகள், விருந்து சமைப்பவர்கள் என பல லட்சம் பேர் முறையாக பதிவு செய்யாமல் உள்ளனர். ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் பொதுவான ஊதியம் மற்றும் பணியிடம் சார்ந்த நல விதிகளை தொழிலாளர் துறை செயல்படுத்துகிறது. ஆனா, மற்ற தொழில் நிறுவனங்களுக்கும், உணவு பொருள் சார்ந்த ஓட்டல் தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. ஊழியர்களின் பணி நேரம், பணிச்சுமை, குறைந்தபட்ச ஊதியம், ஊதிய உயர்வு, அவசரகால ஊதியத்துடன் கூடிய விடுப்பு, பணி பாதுகாப்பு, விபத்து இழப்பீடு உள்ளிட்டவைக்கான ஒழுங்குப்படுத்தப்பட்ட நடைமுறைகள் எதுவும் இல்லை. அனுபவ சான்றிதழ், மருத்துவ காப்பீடு, பிஎப் எந்தவொரு முறையான உதவிகளும் கிடைப்பதில்லை. இதை அரசு அதிகாரிகளும் முறைப்படுத்தவில்லை. தினக் கூலிகளான ஓட்டல் தொழிலாளர்கள் பலருக்கு சொந்த வீடு கிடையாது. இதே நேரம் தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழிலாளர்களுக்கு அரசுத்துறை சார்பில் இலவச காப்பீடு, மருத்துவ உதவிகள், இலவச மனை பட்டாக்கள் போன்றவை வாரியங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. ஆனால், ஓட்டல் தொழிலாளர்களுக்கென தனி வாரியம் இல்லாததால் உரிய பலன் கிடைப்பதில்லை. எனவே, ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்ட தொழிலாளர்களைக் கொண்ட தனி வாரியத்தை அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரர் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்….

The post ஓட்டல், டீக்கடை தொழிலாளருக்கு நல வாரியம் அமைக்க வழக்கு: அரசு பரிசீலிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Citel ,Welfare Board for Deakkaddy Workers ,Madurai ,iCort Branch ,Board of Welfare for Teakkoody Workers ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி