×

வேளாண் சட்ட ஆதரவால் விவசாயிகள் அதிருப்தி கிழக்கில் யாருக்கு ‘வெற்றி உதயம்’

* சிட்டிங் எம்எல்ஏவுக்கு பிரகாச வாய்ப்பு* அதிமுக வேட்பாளருக்கு தொடரும் எதிர்ப்புமதுரை கிழக்கு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்ட பணிகள் காரணமாக திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உள்இட ஒதுக்கீடு, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு உள்ளிட்ட விவகாரங்களால் அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தின் 10 சட்டமன்றத்தொகுதிகளில் மதுரை கிழக்கு தொகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யானைமலை பிரமிப்பாய் காட்சியளிக்கிறது. யானைமலையில் தமிழ் பிராமிக் கல்வெட்டு, குடவரை கோயில் மற்றும் சமணர் படுகைகள் உள்ளன. இப்படி தொன்மை இடங்களைக் கொண்ட சிறப்புக்குரியதாக இத்தொகுதி இருக்கிறது. விவசாயிகள், நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்களை அதிகம் கொண்டதாக இத்தொகுதி உள்ளது. கிராமங்கள்  அதிகம்…:

 மதுரை  கிழக்கு தொகுதி, மாநகராட்சி எல்லையில் அமைந்திருந்தாலும், நகரின்  விரிவாக்க பகுதிகளும், கிராமங்களும் இத்தொகுதியை அலங்கரிக்கின்றன.  நாராயணபுரம், அய்யர் பங்களா, வண்டியூர், ஐகோர்ட் கிளை உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளை கொண்டது. ஒத்தக்கடையில் 200க்கும் மேற்பட்ட எவர்சில்வர்  தொழிற்சாலைகள் உள்ளன. இதனை நம்பி சுமார் 50 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர்.  இதுதவிர கடச்சனேந்தல், காதக்கிணறு, சத்திரப்பட்டி, பூலாம்பட்டி,  கள்ளந்திரி, மாங்குளம், அப்பன் திருப்பதி, மாத்தூர், காவனூர், குலமங்கலம்,  கருவனூர், மந்திகுளம் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இத்தொகுதியில் யாதவர்கள், முக்குலத்தோர், ஆதி திராவிடர் மற்றும் பிற சமூக  மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். தொகுதியில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 145 வாக்காளர்கள்  உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 564 பேர் பெண்கள். 1 லட்சத்து  60 ஆயிரத்து 643 பேர் ஆண்கள். 37 பேர் திருநங்கைகள் ஆவர்.சிட்டிங் எம்எல்ஏவுக்கு சீட்..:

வரும் சட்டமன்றத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரான சிட்டிங் எம்எல்ஏ பி.மூர்த்தி போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் 1,08,569 வாக்குகள் பெற்று, 32,772 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை சேர்ந்த தக்கார் பாண்டியை தோற்கடித்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து, கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்தனர். இத்தொகுதி திமுக தொகுதி என்பதால், ஆளுங்கட்சி கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து மூர்த்தி எம்எல்ஏ தொகுதி மக்களுக்கு கட்சி பாராமல் அரிசி, நிவாரண பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். இது தொகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ஒத்தக்கடையில் அரசு கலைக்கல்லூரி துவங்கப்படும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது இப்பகுதி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுத்தந்துள்ளது. கூட்டணி பலம்…: கிழக்குத்தொகுதியில் திமுக கூட்டணி பலமும் இத்தேர்தலில் கை கொடுக்கிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யா சீரமைப்பிற்கும் முன்னதாக தொகுதியில் வென்றனர். தொடர்ந்து கிழக்குத்தொகுதியில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என் நன்மாறன் 2 முறை வென்றார். களப்பணியில் இக்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மாஜி எம்பிக்கு சீட்…:இத்தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் கோபாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் எம்பி மற்றும் மாநகராட்சியில் பொறுப்பு வகித்துள்ளார். இவர் பொறுப்புகளில் உள்ள காலத்தில் இத்தொகுதி மக்களுக்கு அடிப்படை உள்ளிட்ட எவ்வித வசதியும் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஓங்கி ஒலிக்கிறது. இவர் பிரசாரத்தை துவக்காத நிலையில், திமுக வேட்பாளர் மூர்த்தி வீடுவீடாக சென்ற பிரசாரம் செய்து வருகிறார்.  அமமுகவில் தங்கசரவணன், மநீம சார்பில் முத்துக்கிருஷ்ணன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர் இவர்களுக்கு இத்தொகுதியில் பெரிதான செல்வாக்கு இல்லாத நிலையில் புதிய முகங்களாகவே உள்ளனர். மேலும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சைகள் களமிறங்குகின்றனர். தொகுதிக்குள் விவசாயிகள், கிராம மக்கள் அதிகம் உள்ளதால், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். உள் இட ஒதுக்கீடு விவகாரமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மீண்டும் திமுக இத்தொகுதியில் வெற்றி வாகை சூட அமோக வாய்ப்புள்ளது….

The post வேளாண் சட்ட ஆதரவால் விவசாயிகள் அதிருப்தி கிழக்கில் யாருக்கு ‘வெற்றி உதயம்’ appeared first on Dinakaran.

Tags : Thurai ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!